3998. வரம்பெறும் ஆன்ம உணர்ச்சியும் செல்லா
வருபர உணர்ச்சியும் மாட்டாப்
பரம்பர உணர்ச்சி தானும்நின் றறியாப்
பராபர உணர்ச்சியும் பற்றா
உரம்பெற உணர்வார் யார்எனப் பெரியர்
உரைத்திட ஓங்கும்ஓர் தலைவன்
கரம்பெறு கனிபோல் என்னுளம் புகுந்தான்
கடவுளைத் தடுப்பவர் யாரே.
உரை: மேன்மை பொருந்திய ஆன்ம ஞானமும், கெடாமல் ஒழுகி வருகின்ற பரஞானமும், வீழ்ச்சி காண மாட்டாத பரம்பர ஞானமும், உடனின்று அறிய லாகாத பராபர ஞானமும், பற்ற முடியாத வன்மையுண்டாக விளங்கும் சிவஞானத்தை, ஒருமை மிக உணர வல்லவர் யாவர் எனப் பெரிய ஞானவான்கள் எடுத்துப் பேச அவரிடையே உயர்ந்தோங்குகின்ற ஒப்பற்ற சிவபெருமானாகிய தலைவன் அங்கையில் பெற்ற நெல்லிக்கனி போல் என் உள்ளத்துள் புகுந்து கொண்டருளினானாதலால் அக்கடவுளைப் புகாதபடி தடுக்க வல்லவர் யாவர்; ஒருவருமில்லை. எ.று.
ஆன்ம உணர்ச்சி, ஆன்ம ஞானம், ஆன்ம ஞானத்தால் எய்துவது மேன்மையாதலால் அதனை “வரம் பெறும் ஆன்ம உணர்ச்சி” என்னும் அதனினும் மேம்பட்டதாய் வழி வழியாக வந்து கொண்டிருக்கும் பரஞானத்தைப் “பர உணர்ச்சி” என்றும் உரைக்கின்றார். ஈண்டுச் செல்லுதல் இடையறவு படுதல். பொருட்களின் மேன்மை கீழ்மை நோக்கும் அறிவுபரம்பர உணர்ச்சியாகும். அது நிறைந்த பயன் தராமைபற்றி, “மாட்டாப் பரம்பர உணர்ச்சி” எனப்படுகிறது. பராபர உணர்ச்சியாவது மெய்ஞ்ஞானம். மெய்ஞ்ஞானத்தால் மெய்ம்மை காண முயல்வார்க்கு அருள் ஞான மல்லது ஆன்ம உடனிருந்தறிதல் வேண்டாமையின் தானும் நின்றறியாப் பராபர உணர்ச்சி என்று குறிப்பிட்டு இவ்வுணர்வுகளால் பசுபாச ஞானப் பேறே எய்துதலால் அவற்றைப் பற்றா என விலக்குகின்றார். சிவஞானத்தால் சிவபோகமாகிய உண்மைப்பயன் எய்த உணர வல்லவர் யார் என மெய்ம்மை ஞானிகள் கையற்றுரைப்பது பற்றி, “உரம் பெற உணர்வார் யாரெனப் பெரியர் உரைத்திட” என்று உரைக்கின்றார். இறைவன் தன்னுள்ளத்துட் புகுந்ததை மெய்ம்மை தோன்ற விளம்புகின்றாராதலின், “கரம் பெறு கனி போல் என்னுளம் புகுந்தான்” எனக் கட்டுரைக்கின்றார். கடவுள் - எல்லாவற்றையும் கடந்து உட்புகுந்து அருள்பவன். இத்தகைய கடவுள் என்னுள் புகுந்து கொண்டானாதலால் அவனை “யாவர் தடுக்க வல்லார்” எனப் பெருமிதம் தோன்ற உரைப்பது காண்க. (5)
|