3999. படைத்திடல் முதல்ஐந் தொழில்புரிந் திலங்கும்
பரம்பர ஒளிஎலாம் அணுவில்
கிடைத்திடக் கீழ்மேல் நடுஎனக் காட்டாக்
கிளர்ஒளி யாய்ஒளிக் கெல்லாம்
அடைத்தகா ரணமாய்க் காரணங் கடந்த
அருட்பெருஞ் ஜோதியாம் ஒருவன்
கடைத்தனிச் சிறியேன் உளம்புகுந் தமர்ந்தான்
கடவுளைத் தடுப்பவர் யாரே.
உரை: படைத்தல் முதலிய ஐவகைத் தொழில்களைச் செய்து, விளங்கும் மேலும் கீழுமாகிய ஒளிப் பொருட்கள் எல்லாவற்றையும் ஓர் அணுவில் காணுமாறு, கீழ் என்றும், மேல் என்றும், நடு வென்றும் காட்ட லாகாது ஒளிரும் ஒளியாய், ஒளிப் பொருட்கள் எல்லாவற்றிற்கும் பொருந்திய மூல காரணமாய், அக்காரணத்தையும் கடந்து அப்பாலதாகிய அருட் பெருஞ் சோதியாகும் ஒருவனாகிய சிவபெருமான் கீழ்மைப்பட்ட மிக்க சிறுமையை யுடைய எனது உள்ளமாகிய குடிசைக்குள் புகுந்து வீற்றிருக்கின்றானாயினும் அவனைப் புகாவாறு தடுக்க வல்லவர் யாவர்! எ.று.
படைத்தல் முதலிய தொழில் ஐந்துமாவன; படைத்தல், காத்தல், அழித்தல், அருளுதல், மறைத்தல் என்ற ஐந்துமாம். அத்தொழில்களைப் புரியும் பிரமன் முதலிய தேவர்கள் ஒளி யுருவாய் ஒருவர்க்கு ஒருவர் உயர்வு தாய்வு கற்பிக்கும் நிலையில் அமைந்திருப்பதால் அவர்களைப் பரம்பர ஒளி யென்று கூறுவாராய், “படைத்திடல் முதல் ஐந்தொழில் புரிந்திலங்கும் பரம்பர ஒளி” என்று கூறுகின்றார். பரம்பரம் - மேன் மேல் உயர்தல். ஒளியுருவாய் விளங்கும் அவர்கள் அனைவரையும் ஓர் அணுப் பொருளில் காணுமாறு அமைத்து அவ்வொளிகளினிடையே மேல் நடு கீழ் என நிலவும் வேறுபாடு காட்டாமல் ஓங்கும் பேரொளியாய் விளங்குவது பற்றி, “ஒளி எலாம் அணுவில் கிடைத்திடக் கீழ் மேல் நடு வெனக் காட்டாக் கிளர் ஒளியாய்” என்று மொழிகின்றார். படைத்தல் முதலிய தொழில்களைச் செய்யும் ஒளி யுருவினராகிய தேவர்கள் அனைவரையும் தனக்குள் ஒடுக்கித் தான் பேரொளியாய் நின்று திகழ்வது விளங்கச் சிவனை, “கிளர் ஒளியாய்” எனவும், சிவ வொளியாகிய தனக்குள் பிரமன் முதலிய ஒளிகளினிடையே வேறுபாடு தோன்றாவண்ணம் விளங்குவது பற்றி, “கீழ் மேல் நடு வெனக் காட்டாக் கிளர் ஒளி” எனவும் கிளர்ந்து உரைக்கின்றார். இவ்வொளிகள் எல்லாவற்றிற்கும் மூல காரணமாக இருத்தலால் சிவனை, “ஒளிக்கெலாம் அடைத்த காரணம்” எனவும், அக்காரண நிலையும் கடந்து அதற்கு அப்பாலாய் உயிர்கட்கெல்லாம் பேரருள் வழங்கும் பேரொளியாய்ப் பிறங்குவது பற்றி, “காரணம் கடந்த அருட் பெருஞ்சோதியாம் ஒருவன்” எனவும் இயம்புகின்றார். சிறுமை குணத்தால் கடைப்பட்டவன் என்றற்கு, “கடைத் தனிச் சிறியேன்” என்று வடலூர் வள்ளல் தம்மைக் குறிக்கின்றார். எனது சிறுமை நோக்காமல் புன்னுள் புகுந்து இருந்தருளுகின்றான் என்பாராய், “சிறியேன் உளம் புகுந்து அமர்ந்தான்” என்றும், எல்லாம் வல்ல அவனை இனித் தடுப்பவர் ஒருவருமில்லை என்று பெருமிதங் கொண்டு பேசுகின்றாராதலால், “கடவுளைத் தடுப்பவர் யாரே” என்றும் எடுத்து மொழிகின்றார். (6)
|