4000.

     அளவெலாம் கடந்த பெருந்தலை அண்ட
          அடுக்கெலாம் அம்மஓர் அணுவின்
     பிளவில்ஓர் கோடிக் கூற்றில்ஒன் றாகப்
          பேசநின் றோங்கிய பெரியோன்
     களவெலாந் தவிர்த்தென் கருத்தெலாம் நிரப்பிக்
          கருணைஆர் அமுதளித் துளமாம்
     வளவிலே புகுந்து வளர்கின்றான் அந்தோ
          வள்ளலைத் தடுப்பவர் யாரே.

உரை:

     நியாய நூல்கள் உரைக்கும் பிரமாண வகைகள் எல்லாவற்றிற்கும் அப்பாலாய் உள்ள, பேரிடத்தனாயினும் எண்ணிறந்தனவாய், ஒன்றுக் கொன்று மேலாய் அமைந்துள்ள அண்டங்கள் எல்லாவற்றிலும் ஓர் அணுவின் பிளவினுள் உள்ள கோடிக் கணக்கான கூறுகளில் ஒரு கூறாகச் சிறுமைப் படுத்தி அறிஞர் கூறுமாறு நின்று உயர்ந்தோங்குகின்ற பெருமானாகிய சிவ பரம்பொருள் என்னுடைய வஞ்ச நினைவுகள் எல்லாவற்றையும் போக்கி என் கருத்து முழுதும் நிறைந்து தனது கருணையாகிய அரிய அமுதத்தை யளித்து என்உள்ளமாகிய இடத்துக்குள்ளே புகுந்து சிறக்கின்றானாயினும் அவ்வள்ளற் பெருமானைத் தடுக்க வல்லவர் யாவர்? எ.று.

     நியாய நூல்கள் பிரமாணங்களை மூன்றாகவும் எட்டாகவும் பத்தாகவும் பலப்படக் கூறுதலால் அவை யனைத்தும் அடங்க, “அளவெலாம்” என அறிவிக்கின்றார். இந்த அளவை வகைகளுக்கெட்டாத பேரிடமாய் அண்ட வகைகள் அனைத்தையும் தன்கண் அடக்கிக் கொண்டிருக்கின்ற பெரும் பரப்பாகிய இடத்தை, “அளவெலாம் கடந்த பெருந்தலை” எனவும், அதன்கண் ஒடுங்கிக் கிடக்கின்ற பல கோடி அண்டங்களை ஒரு சேரத் தொகுத்து, “அண்ட அடுக்கெலாம்” எனவும் இயம்புகின்றார். அண்டங்கள் எல்லாம் அணுத்திரளாதலின் அத்திரளினுள் அமைந்த நுண்ணிய அணுவினுள் அணுவாக விளங்குகிறான் என்று அறிஞர்கள் அறிந்துரைத்தலால், “ஓர் அணுவின் பிளவில் ஓர் கோடிக் கூற்றில் ஒன்றாகப் பேச நின்றோங்கிய பெரியோன்” என்று கூறுகின்றார். இதனை மணிவாசகப் பெருமான், “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்று எழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன இன்னுழை கதிரின் துன்னணுப் புரையச் சிறியவாகப் பெரியோன்” (அண்ட) என உரைப்பது காண்க. இவ்வாறு அணுவுக் கணுவாய் இருந்தோங்கும் பெருமானாகிய சிவபிரான் எனது சிறிய உள்ளத்தின்கண் எழுந்தருளும் பொருட்டு அதன்கண் உள்ள கள்ள நினைவுகளாகிய அழுக்கினைப் போக்கி உள்ளகம் நிரம்பத் தனது சிவவொளியைப் பரப்பி அருளுகின்றான் என்பாராய், “களவெலாம் தவிர்த்து என் கருத்தெலாம் நிரப்பி” என்றும், பின்னர் அவன் தனது திருவருள் ஞானத்தை வழங்கினான் என்பாராய், “கருணை ஆரமுதளித்து” என்றும் இயம்புகின்றார். இத்தகைய பெருங் கருணையாளனாகிய சிவபெருமான் என்னுள் புகுந்து கொண்டதனால் இனி அவனை அவ்வாறு செய்யாவாறு தடுக்க வல்லவர் ஒருவரும் இல்லை என்று வடலூர் வள்ளல் பெருமிதம் கொண்டு கூறுகின்றார்.

     (7)