4002.

     அறிந்தன அறிந்தாங் கறிந்தறிந் தறியா
          தையகோ ஐயகோ அறிவின்
     மறிந்தன மயர்ந்தேம் எனமறை அனந்தம்
          வாய்குழைந் துரைத்துரைத் துரையும்
     முறிந்திட வாளா இருந்தஎன் றறிஞர்
          மொழியும்ஓர் தனிப்பெருந் தலைவன்
     செறிந்தென துளத்தில் சேர்ந்தனன் அவன்றன்
          திருவுளம் தடுப்பவர் யாரே.

உரை:

     முன் அறிந்தவற்றை அறிந்தது போல அறிவால் பன்முறை ஆராய்ந்தும் அறிய மாட்டாது ஐயோ அறிவு மறுக்கப் பட்டேன் மயங்கினேம் என்று எண்ணிறந்த வேதங்கள் வாய் குழறிச் சொல்லிச் சொல்லி மாட்டாமை யுற்றுச் சோர்ந்து மோனமுற்றன என்று ஞானவான்கள் உரைக்கின்ற ஒப்பற்ற தனிப் பெருந் தலைவனான சிவபெருமான் அன்பு நிறைந்து எனது உள்ளமாகிய இடத்தினுள் எழுந்தருளுகின்றான்; ஆகவே அவனுடைய திருவுள்ளத்தை யாவரால் தடுக்க முடியும். எ.று.

     பொறி புலன்களும் மனமும் கலந்து நின்று பொருட்களை அறிவது இயல்பாதலின், “அறிந்தது அறிந்தாங்கு” எனவும், அவற்றால் பன்முறை ஆய்ந்தாய்ந் தறிந்தும் அறிய மாட்டாமை யுற்றமை புலப்பட, “அறிந்தறிந்து அறியாது ஐயகோ ஐயகோ” எனவும் இயம்புகின்றார். மாட்டாமை எய்திய வேதங்கள் அறிவு மழுங்கிச் செயலற்றுப் போத முற்றமை தோன்ற, “அறிவின் மறிந்தனம் அயர்ந்தேம் என மறை அனந்தம் வாய் குழைந்து உரைத்து உரைத்து உரையும் முறிந்திட வாளா இருந்த” என்று இசைக்கின்றார். அறிவு மறிதலாவது அறிவு அறிய மாட்டாது மழுங்குதல். மயர்தல் - மயங்குதல். மறை அனந்தம் என்பது எண்ணிறந்த வேதங்களை. மறைகள் ஓதப்படும் இயல்பினவாதலால் ஓத மாட்டாமை விளங்க, “மறை யனந்தம் வாய் குழைந்து உரைத்துரைத்து” எனவும், “உரையும் முறிந்திட வாளா இருந்த” எனவும் சொல்லுகின்றார். உரை முறிதலாவது மேலும் ஓத மாட்டாமல் ஓழிதல். வாளா இருத்தலாவது மௌனம் எய்துதல். இவ்வாறு வேத விற்பன்னர்கள் மொழிகின்றார்கள் என்பாராய், “என்று அறிஞர் மொழியும் ஓர் தனிப் பெருந் தலைவன்” என்று கூறுகின்றார். செறிந்து என்பதற்கு உரிய எழுவாயான அன்பு அறிவிக்கப்பட்டது. எல்லாம் வல்ல பெருமானாதலின் அவனுடைய திருவுள்ளத்தின் விருப்பை ஒருவராலும் தடுக்கமுடியாது என்றற்கு, “அவன் தன் திருவுளம் தடுப்பவர் யாரோ” என்று புகல்கின்றார்.

     (9)