49. கண்டேன் கனிந்தேன் கலந்தேன் எனல்
அஃதாவது, வள்ளற் பெருமானுடைய திருவுள்ளத்தில் எழுந்தருளிய சிவபெருமானது திருவருட் காட்சியைத் தியான வாயிலாக ஞானக் கண்ணால் கண்டு, வழிபட்டு அவ்விடத்துச் சுரந்து பெருகும் இன்பத்தில் திளைத்து ஒன்றிய திறம் கூறுவதாம்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 4004. அருளரசை அருட்குருவை அருட்பெருஞ் ஜோதியை என்
அம்மையைஎன் அப்பனைஎன் ஆண்டவனை அமுதைத்
தெருளுறும்என் உயிரைஎன்றன் உயிர்க்குயிரை எல்லாம்
செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியை
மருவுபெரு வாழ்வைஎல்லா வாழ்வும்எனக் களித்த
வாழ்முதலை மருந்தினைமா மணியைஎன்கண் மணியைக்
கருணைநடம் புரிகின்ற கனகசபா பதியைக்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
உரை: அருளரசனும், அருட் குருவும், அருட் பெருஞ் சோதியும் எனக்கு அம்மை அப்பனும், ஆண்டவனும், அமுதாகியவனும், தெளிவுமிக்க என்னுடைய உயிரும், என் உயிர்க்குயிரும், எல்லாம் செய்யவல்ல ஒப்பற்ற தலைமை சான்ற சித்த சிகாமணியும், பெறுதற்குரிய பெருவாழ்வையும் ஏனைய எல்லா வாழ்வையும் எனக்குத் தந்தருளிய என்னுடைய வாழ்முதலும், மருந்தும், மாமணியும், என் கண்மணியுமாய் அருள் கூத்தாடுகின்ற கனக சபாபதியாகிய சிவபெருமானைக் கண் குளிரக் கண்டு மனங் கனிந்த மகிழ்வுடன் கலந்து கொண்டேன். எ.று.
அருளரசு - அருளாட்சி புரிபவன். திருவருள் ஞானத்தை நல்குபவனாதலால் சிவபெருமானை, “அருள் குரு” என்று கூறுகின்றார். திருவருள் ஞான வொளியையே பெரிய ஒளியாக உடையவனாதலால் சிவபெருமானை, “அருட் பெருஞ் சோதி” என்று புகழ்கின்றார். உருவில்லாத உயிர்க்கு மலப்பிணிப்பு நீங்கும் பொருட்டு உலகு, உடல், கருவி, கரணம், உலகியற் போகம் ஆகியவற்றைத் தந்து அருள் புரிகின்றானாதலால் இறைவனை, “ஆண்டவன்” என்று பாராட்டுகின்றார். நினைக்குந் தோறும், பேசுந் தோறும், வழிபடுந் தோறும் இன்ப அமுதமாய் மகிழ்வித்தலால் ஆண்டவனை, “அமுது” எனக் கூறுகின்றார். அறிவால் தெளிவுறும் பொருளாதலால் உயிரை, “தெருளுறும் உயிர்” என்று சிறப்பிக்கின்றார். உயிர்க்குயிராய் இருந்து உயிரை இயக்குபவன், வரம்பிலாற்றல் உடையவன் என்பது பற்றியும், ஆன்மாக்களின் சிந்தைக்கண் உயர்ந்து விளங்குதலும் உடையவனாதலால், “எல்லாம் செய்ய வல்ல தனித் தலைமைச் சித்த சிகாமணி” என்று செப்புகின்றார். சித்தர்களுக் கெல்லாம் முடிமணியாக விளங்குபவன் என்றற்கு, “சித்த சிகாமணி” என உரைக்கின்றார் எனினும் அமையும். பெருமைக்கு எல்லையாகிய பெருவாழ்வை நல்குபவனாதலால், “பெருவாழ்வு” என்று புகழ்கின்றார். மண்ணக வாழ்வு, தேவருலக வாழ்வு. முத்தி வாழ்வு என வாழ்வு வகை பல கூறப்படுதலின், “எல்லா வாழ்வும்” என இயம்புகின்றார். எல்லா வகை வாழ்வும் தமக்குக் கிடைத்தமை பற்றி, “எல்லா வாழ்வும் எனக்கு அளித்த வாழ்முதல்” என இசைக்கின்றார். சிவபெருமானுடைய திருநடனத்தால் உயிர்கள் எல்லா நலங்களையும் பெறுவதால் அதனை, “கருணை நடம்” என்றும், அந்த நடனத்தைப் பொற் சபையின்கண் புரிவது பற்றி, “கனக சபாபதி” என்றும் இயம்புகின்றார். கூத்தாடும் பெருமானை ஞான நாட்டம் கொண்டு கண்டு கண் குளிரப் பார்த்து ஆங்குப் பெருகும் பேரின்பத்தால் உளம் குழைந்து ஒன்றி விடுகின்றமை புலப்பட, “கண்டு கொண்டேன் கனிந்து கொண்டேன் களித்துக் கலந்து கொண்டேன்” என்று கூறுகின்றார்.
இதனால், வடலூர் வள்ளல் கூத்தப் பெருமானைக் கண்டு மனம் குழைந்து அவனது அருளில் கலந்து ஒன்றிய திறம் உரைத்தவாறாம். (1)
|