4005.

     திருத்தகுவே தாந்தமொடு சித்தாந்த முதலாத்
          திகழ்கின்ற அந்தம்எலாம் தேடியுங்கண் டறியா
     ஒருத்தனைஉள் ஒளியைஒளிர் உள்ஒளிக்குள் ஒளியை
          உள்ளபடி உள்ளவனை உடையபெருந் தகையை
     நிருத்தனைமெய்ப் பொருளான நின்மலனைச் சிவனை
          நித்தியனைச் சத்தியனை நிற்குணனை எனது
     கருத்தனைச்சிற் சபையோங்கு கடவுளைஎன் கண்ணால்
          கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

உரை:

     திருவிளங்குகின்ற வேதாந்தம் சித்தாந்தம் முதலாக விளக்கமுறும், அந்தங்களெல்லாம் வல்லவர்கள் தத்தமக்குரிய நெறியில் முயன்று தேடியும் கண்டறியாத சிவபெருமானாகிய ஒருவனும், உள்ளத்தின்கண் ஒளிர்கின்ற ஒளிப் பொருளும், அவ்வொளிக்குள் ஒளியாய் ஒளிர்பவனும், உள்ளதன் உண்மைத் திரிபின்றி உள்ளவனும், உலகுயிர்களை உடைமையும் அடிமையுமாக உடையவனும், சபையின்கண் கூத்தாடும் பெருமானும், மெய்ப்பொருளாகிய நின்மலனும், சிவனும், நித்தியனும், சத்தியனும், நிற்குணனும், என்னுடைய தலைவனும், ஞான சபையின்கண் ஓங்குகின்ற கடவுளுமாகிய சிவ பரம்பொருளை என் ஞானக் கண்களால் நன்கு கண்டு மனம் குழைந்து அவரது திருவருள் இன்பத்தில் கலந்து கொண்டேன். எ.று.

     நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், கலாந்தம், வேதாந்தம், சித்தாந்தம் என அந்தங்கள் ஆறு உண்மையின், “திருத்தகு வேதாந்தமொடு சித்தாந்த முதலாத் திகழ்கின்ற அந்தமெலாம்” எனவும், அவ்வந்தங்களை யுணர்த்தும் நூல்களைப் பயின்று வல்ல பெருமக்களை, “அந்தம்” எனவும் குறிக்கின்றார். அவர்கள் அனைவரும் வேதாந்த சித்தாந்த முதலாக வுள்ள அந்தங்கள் நல்கும் ஞானக் கண் கொண்டு பன்னாள் முயன்று தேடியும் காண முடியாதவனாயினான் சிவபெருமான் என்பதை விளக்குதற்கு, “அந்தமெலாம் கண்டறியா ஒருத்தன்” என வுரைக்கின்றார். ஆன்மாக்களின் உள்ளத்தின்கண் தங்கி ஒளிர்வதோடு அவ்வொளிக்குள்ளும் நுண்ணிய ஒளியாய்த் திகழ்வது பற்றி, “உள்ளொளியை ஒளிர் உள்ளொளிக்கு உள்ளொளியை” என்று குறிக்கின்றார். எத்துணை உலகங்களைப் படைத்தளிக்கினும் எத்துணைக் காலம் கழியினும் முன் உள்ளபடி ஒரு திரிபுமின்றி என்றுமுள்ள பொருளாதலால் சிவ பரம்பொருளை, “உள்ளபடி உள்ளவன்” எனவும், உலகுகள் அத்தனையும் தனக்கு உடைமையாகவும் உயிர்த்தொகை அத்தனையும் தனக்கு அடிமையாகவும் உடைய பெருமானாதலால், “உடைய பெருந்தகை” எனவும் கூறுகின்றார். கூத்தப் பெருமானாதல் பற்றி, “நிருத்தன்” எனவும், மலக் கலப்பில்லாத உண்மைப் பொருளாதலால், “மெய்ப் பொருளான நின்மலன்” எனவும், சாந்தம் மங்கலம் இன்பம் அன்பு ஆகிய எல்லாம் திரண்டு ஓருருவாய் விளங்குகின்ற பரம்பொருள் என்பது பற்றி, “சிவன்” எனவும், என்றும் உள்ளது பற்றி, “நித்தியன்” எனவும், “சத்தியன்” எனவும் இயம்புகின்றார். மாயா மண்டலத்துக் காரியப் பொருளாகிய குண தத்துவத்தையும் கடந்தவனாதலின், “நிர்க்குணன்” என்றும், அப்பெருமான் தனக்குத் தலைவன் என்பது தோன்ற, “எனது கருத்தன்” என்றும், ஞான சபைக்கண் ஞானவான்களுக்குக் காட்சி வழங்கும் ஞான மூர்த்தியாதல் விளங்க, “சிற்சபை ஓங்கு கடவுள்” என்றும் எடுத்துரைக்கின்றார். அப்பெருமானை ஞானக் கண்ணால் கண்டு அவனது அருளொளியால் குழைந்து களிப்புற்று அவரது திருவருள் ஞான இன்பத்தில் ஒன்றினமை புலப்பட, “என் கண்ணால் கண்டு கொண்டேன் கனிந்து கொண்டேன் களித்துக் கலந்து கொண்டேன்” என்று கூறுகின்றார்.

     இதனால், ஞான சபையின்கண் ஓங்குகின்ற கடவுளாகிய சிவ முதற் கடவுளைக் கண் குளிரக் கண்டு வடலூர் வள்ளல் கலந்து கொண்டமை தெரிவித்தவாறாம்.

     (2)