4006. பாட்டுவந்து பரிசளித்த பதியைஅருட் பதியைப்
பசுபதியைக் கனகசபா பதியைஉமா பதியைத்
தேட்டமிகும் பெரும்பதியைச் சிவபதியை எல்லாம்
செய்யவல்ல தனிப்பதியைத் திகழ்தெய்வப் பதியை
ஆட்டியல்செய் தருள்பரம பதியைநவ பதியை
ஆனந்த நாட்டினுக்கோர் அதிபதியை ஆசை
காட்டிஎனை மணம்புரிந்தென் கைபிடித்த பதியைக்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
உரை: அன்பர்கள் பாடுகின்ற பாட்டுக்களை மகிழ்ந்து அவ்வப்போது பரிசளித்து அருளிய பதிப் பொருளும், அருள் ஞானம் வழங்கும் பதிப் பொருளும், பசுபதியும், கனக சபாபதியும், உமாதேவிக்குத் தலைவனாகிய பதிப் பொருளும், தேடுவார் தேடத் தேட மிக்குச் சிறக்கும் பெரிய பதிப் பொருளும், சிவமாகிய பதிப் பொருளும், எல்லாம் செய்ய வல்ல தனிப் பதியும், விளங்குகின்ற தெய்வத் தன்மையை யுடைய பதிப் பொருளும், பலவகை நடனங்களைச் செய்தருளும் பரம பதியும், நவ பதியும், இன்ப உலகமாகிய முத்தி உலகுக்கு அதிபதியும், இல்லாத ஆசையைக் காட்டி என்னை மணம் செய்து கொண்டு என் கையைப் பிடித்த ஞானத் தலைவனுமான சிவபெருமானைத் திருவருட் கண் கொண்டு கண்டு உளங் குழைந்து அவனதருள் இன்பத்தில் திளைத்து ஒன்றினேன். எ.று.
ஞானசம்பந்தர், சுந்தரர், பாணபத்திரர் முதலிய பலர்க்கு இறைவன் பரிசளித்த வரலாறுகளைப் புராணங்கள் உரைத்தலால், “பாட்டு வந்து பரிசளித்த பதி” என்று பகர்கின்றார். “பாடுவார்க் கருளும் எந்தை” (முதுகுன்) என்றும், “பண்ணென்ற இசை பாடும் அடியார்கள்குடியாக மண்ணின்றி விண் கொடுக்கும் மணிகண்டன்” (புள்ளிருக்கு) என்றும் ஞானசம்பந்தர் முதலியோர் கூறுவது காண்க. பசுபதி - உயிர்களுக்கெல்லாம் தலைவன். அன்பர்கள் அன்பினால் காண்டற்குப் பலகால் முயன்று தேடுந்தோறும் தேடும் எல்லைக்கு அப்பாற் சென்று திகழ்தலின் சிவனை, “தேட்ட மிகும் பெரும் பதி” எனவும், தெய்வங்களுக் கெல்லாம் பரதெய்வமாய் அவர்களை ஆண்டருளுவது பற்றி, “தெய்வப் பதி” எனவும் சிறப்பிக்கின்றார். ஆடல் வகை பலவாயினும் அவற்றை ஆடவல்லார்க் கெல்லாம் மேலான ஆடற் பதியாவது பற்றி இறைவனை, “ஆட்டியல் செய்தருள் பரமபதி” என்று இயம்புகின்றார். ஆனந்த நாடு - வற்றாத பேரின்பம் நிறைந்த நாடாகிய முத்தி யுலகம். அவ்வுலகிற்குத் தனிமுதற் பதியாதல் தோன்ற, “ஆனந்த நாட்டினுக்கு ஓர் அதிபதி” என்று கூறுகின்றார். சிவநெறிக்கண் ஆசை உண்டுபண்ணித் திருவருள் இன்பத்தின் வேட்கை மிகுவித்துத் தன்பால் நீங்காத காதல் கொள்ளச் செய்தமை விளங்க வடலூர் வள்ளல், “ஆசை காட்டி எனை மணம் புரிந்தென் கை பிடித்த பதி” என்றும், அவருடைய சிவஞான போகத்தை அனுபவித்தமை புலப்பட, “கண்டு கொண்டேன் கனிந்து கொண்டேன் களித்துக் கலந்து கொண்டேன்” என்றும் இயம்புகின்றார்.
இதனால், சிவ பரம்பொருள் வடலூர் வள்ளலார்க்குச் சிவநெறிக்கண் ஆசையுறுவித்துச் சிவபோகத்தில் ஒன்றச் செய்தமை உரைத்தவாறாம். (3)
|