4007. மதித்திடுதல் அரியஒரு மாணிக்க மணியை
வயங்கியபேர் ஒளியுடைய வச்சிரமா மணியைத்
துதித்திடுவே தாகமத்தின் முடிமுடித்த மணியைச்
சுயஞ்சோதித் திருமணியைச் சுத்தசிவ மணியை
விதித்தல்முதல் தொழில்இயற்று வித்தகுரு மணியை
விண்மணியை அம்மணிக்குள் விளங்கியமெய்ம் மணியைக்
கதித்தசுக மயமணியைச் சித்தசிகா மணியைக்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
உரை: விலை மதிக்கவொண்ணாத ஒப்பற்ற மாணிக்க மணியும், விளங்குகின்ற பேரொளியை யுடைய வைர மாமணியும், போற்றப்படுகின்ற வேதாகமங்களின் முடிவில் இருக்கின்ற ஞான மணியும், தானாக ஒளிர்கின்ற ஒளியையுடைய திருமணியும், சுத்த சிவ மணியும், படைத்தல் முதலிய தொழில்களைச் செய்விக்கும் குருமணியும், விண்மணியும், அம் மணிக்குள் மணியாய் விளங்குகின்ற மெய்ம்மணியும், விளைகின்ற சுக மயமான சுக மணியும், சித்த சிகாமணியுமாகிய சிவ பெருமானைத் தியான வாயிலாக ஞானக் கண்ணால் கண்டு உளம் குழைந்து ஆங்குத் தோன்றிய இன்பத்தில் திளைத்து மகிழ்ந்து ஒன்றினேன். எ.று.
மதித்திடுதல் - விலை மதித்தல். மாணிக்க மணி - சிவந்த ஒளி பரப்பும் செம்மணி. தூய வெண்மையான ஒளி பரப்புவது வைரமணி. சிவபெருமானுடைய திருமேனியில் அணிந்த திருநீற்றின் தூய ஒளியைப் புலப்படுத்தற்கு “வைர மணி” என்கின்றார். வச்சிர மணி - வைர மணி. வேதாகமங்களின் முடிந்த ஞானமாதல் பற்றி, “வேதாகமத்தின் முடி முடித்த மணி” எனச் சிவமாகிய ஞானமணியைச் சிறப்பிக்கின்றார். ஏனை மணிகள் சிவத்தின் ஒளி பெற்றுத் திகழ்வது போலின்றிச் சிவனது திருமேனி ஒளி தானே தனி ஒளியாதல் பற்றி, “சுயஞ் சோதித் திருமணி” என்று சொல்லுகின்றார். விதித்தல் - படைத்தல். படைத்தல் முதலிய தொழில்களைச் செய்யும் பிரமன் முதலாக வுள்ள தேவர்களை அவரவர்க்குரிய தொழில்களை முறையே செய்யுமாறு இயக்குவது பற்றி, “விதித்தல் முதல் தொழில் இயற்றுவித்த குருமணி” என இயம்புகின்றார். விண் மணி - ஞாயிறு திங்கள் முதலியவாய் வானத்தில் விளங்குகின்ற ஒளிப் பொருள்கள். அப் பொருட்கள் ஒளி செய்வதற்கு ஏதுவாகிய காரண ஒளியை நல்குவது பற்றி, “விண் மணியை அம்மணிக்குள் விளங்கிய மெய்ம்மணி” என்று விளம்புகின்றார். கதித்தல் - விளைத்தல்; தோன்றுதல். ஆன்மாக்கள் பெற விரும்பும் ஆனந்த மயமாக விளங்குதலால் சிவ பரம்பொருளை, “சுக மய மணி” என்று சொல்லுகின்றார். புருவ நடுவுற்ற தியானத்தால் திருவருள் ஞான நாட்ட மெய்திச் சிவானுபவத்தைத் தாம் பெறுவது விளங்க வடலூர் வள்ளல், “கண்டு கொண்டேன் கனிந்து கொண்டேன் களித்துக் கலந்து கொண்டேன்” என்று கட்டுரைக்கின்றார்.
இதனால், தியானத்தால் எய்திய ஞான நாட்டமுற்றுச் சிவானந்தத்தில் மூழ்கித் திளைத்தமை தெரிவித்தவாறாம். (4)
|