4008.

     மாற்றைஅளந் தறிந்திலம்என் றருமறைஆ கமங்கள்
          வழுத்தமணி மன்றோங்கி வயங்கும்அருட் பொன்னை
     ஆற்றல்மிகு பெரும்பொன்னை ஐந்தொழிலும் புரியும்
          அரும்பொன்னை என்தன்னை ஆண்டசெழும் பொன்னைத்
     தேற்றமிகு பசும்பொன்னைச் செம்பொன்னை ஞான
          சிதம்பரத்தே விளங்கிவளர் சிவமயமாய் பொன்னைக்
     காற்றனல்ஆ காயம்எலாம் கலந்தவண்ணப் பொன்னைக்
          கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன்                                         களித்தே.

உரை:

     ஒத்த பொருள் என வேறு ஒன்றையும் அறிகிலேம் என்று அருமை வாய்ந்த வேதாகமங்கள் சொல்லித் துதிக்க, மணி இழைத்த சபையின்கண் உயர்ந்து விளங்கும் திருவருளே உருவாக யுடைய பொன்னையும், பேராற்றல் படைத்த பெருமை மிக்க பொன்னையும், படைத்தல் முதலிய ஐவகைத் தொழில்களையும் செய்கின்ற பெறற்கரிய பொன்னையும், எளியவனாகிய என்னை ஆண்டருளும் செழும் பொன்னையும், தெளிந்த ஒளி மிக்க பசும் பொன்னையும், செம்பொன்னையும், ஞானமயமாகிய சிதம்பரத்தின்கண் விளங்குகின்ற சிவ மயமான பொன்னையும், ஆகாயம், காற்று, தீ, நீர், மண் ஆகிய பூதங்களனைத்தும் கலந்த அழகிய பொன்னையும் ஒப்பவனாகிய சிவ பரம்பொருளைத் தியானத்தால் அருள் நாட்டம் பெற்று, அங்குத் தோன்றிய பேரின்பத்தில் கலந்து திளைத்து மகிழ்ந்து இன்புற்றேன். எ.று.

     மாற்று - ஒத்த பொருள். மறை ஆகமங்களை முற்றவும் ஓதிய ஞானவான்கள் சொல்வதை வேதாகமங்களின் மேல் ஏற்றிக் கூறுவதால், “அருமறை ஆகமங்கள் வழுத்த” எனவும், அம்பலத்தின் தோற்றப் பொலிவு தோன்ற, “மணி மன்று” எனவும், பொன் போல் மேனியுடையவனாதலால் சிவனை, “அருட் பொன்” எனவும் புகல்கின்றார். மாற்றறிய வாராத பொன் மிக்க வன்மை யுடையதாதலால், “ஆற்றல் மிகு பெரும் பொன்” என்றும், அருள் ஞானம் வழங்கித் தம்மை ஆண்டு கொண்டமை விளங்க, “என்றனை ஆண்ட செழும் பொன்” என்றும் வடலூர் வள்ளல் உரைக்கின்றார். தெளிந்த ஒளியும் மரகதத்தின் நிறமுமுடைய உமாதேவியை உடன் கொண்டுறையும் குறிப்புப் புலப்பட, “தேற்ற மிகு பசும்பொன்” என்றும், சிவத்தின் தனியருட் திருமேனி தூய பொன்னிறம் உடையதாதல் பற்றி, “செம்பொன்” என்றும் தெரிவிக்கின்றார். ஞான சிதம்பரம் - ஞானமே உருவாகிய சிதம்பரம். “மெய்ஞ் ஞானமேயான அம்பலம்” (ஞான) என்று சேக்கிழார் பெருமானும் எடுத்துரைப்பது காண்க. சிதம்பரத்தில் காட்சி தரும் கூத்தப் பெருமான் சிவ மயமாய்த் திகழ்வது பற்றி, “சிதம்பரத்தே விளங்கி வளர் சிவ மயமாம் பொன்” என்று சிறப்பிக்கின்றார். நிலம் முதலிய ஐந்தும் கலந்த பேருருவமே சிவமாதலின், “காற்று அனல் ஆகாயம் எலாம் கலந்த வண்ணப் பொன்” என்று சொல்லி மகிழ்கின்றார்.

     இதனால், சிவ பரம்பொருளைப் பொன் மயமாகக் கண்டு பூரித்து மகிழ்ந்த திறம் புகன்றவாறாம்.

     (5)