4010. திருத்தமிகு முனிவர்களும் தேவர்களும் அழியாச்
சித்தர்களும் சிருட்டிசெயும் திறத்தர்களும் காக்கும்
அருத்தமிகு தலைவர்களும் அடக்கிடவல் லவரும்
அலைபுரிகின் றவர்களும்உள் அனுக்கிரகிப் பவரும்
பொருத்துமற்றைச் சத்திகளும் சத்தர்களும் எல்லாம்
பொருள்எதுவோ எனத்தேடிப் போகஅவர் அவர்தம்
கருத்தில்ஒளித் திருக்கின்ற கள்வனைஎன் கண்ணால்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
உரை: குற்றமின்றி உயர்ந்த முனிவர்களும், தேவர்களும், இறத்தலில்லாத சித்தர்களும், படைத்தலைச் செய்யும் தேவர் இனங்களான பிரமர்களும், காத்தலைச் செய்கின்ற பொருள் மிக்க தலைவர்களான நாரணர்களும், அழித்தலைச் செய்து வருத்தும் உருத்திரர்களும், அருள் புரிகின்ற தேவர்களும், செய்பவர்களையும் செயல்களையும் பொருத்துகின்ற சத்திகளும் சத்திமான்களும் ஆகிய எல்லோரும் மெய்யாகிய பரம்பொருள் எதுவோ என்று தேடிச் செல்ல அவரவர் மனத்தின்கண் மறந்திருக்கின்ற சிவ பெருமானை என் கண்ணால் கண்டு மனம் கனிந்து மகிழ்ந்து கலந்து கொண்டேன். எ.று.
பொறி புலன்களின் சேட்டைகளால் விளையும் குற்றங்களின் நீங்கியவர் முனிவர்களாதலால் அவர்களை, “திருத்தமிகு முனிவர்கள்” எனச் சிறப்பிக்கின்றார். எண்வகைச் சித்திகளையும் உடைமையால் சித்தர்களை, “அழியாச் சித்தர்” என்று புகழ்கின்றார். காத்தற் தொழிலைச் செய்யும் நாரணர்கள் பல்வகைத் திரு நிரம்பியவர்களாதலால் அவர்களை, “காக்கும் அருத்த மிகு தலைவர்கள்” என்று கூறுகின்றார். பிறந்திறந்து வரும் உயிர்களின் ஆற்றலை அடக்கி ஒய்வு பெறுவிக்கும் திறன் உடையவனாதலின் உருத்திரர்களை, “அடக்கிட வல்லவர்” எனவும், அந்நெறியில் அவர்களை அலைத்து அனுக்கிரகம் செய்பவரும் அவர்களேயாதலால், “அடக்கிட வல்லவரும் அலை புரிகின்றவர்களும் உள் அனுக்கிரகிப்பவரும்” என்று உரைக்கின்றார். சத்திகள் ஆன்மாவின் இச்சை, ஞானம், கிரியை என்ற மூவகைச் சத்திகளை எழுப்பிச் செய்தற்குரிய செயல்களைச் செய்தற்குச் செலுத்துதலால் சத்திகளை, “பொருத்தும் மற்றைச் சத்திகள்” என்றும், அச்சத்திகளை யுடைய முதல்வர்களை, “சத்தர்கள்” என்றும் இயம்புகின்றார். இவர்கள் பலரும் தத்தமக்குரிய தொழில் வகையில் வேறுபடுவராயினும் மெய்ப்பொருள் நாட்டத்தில் ஒத்த கருத்துடையவர்களாதலை நாம் உணரும் பொருட்டு, “எல்லாம் பொருள் எதுவோ எனத் தேடிப் போக” என்றும், அவர்கள் உள்ளத்து இறைவன் அவனை யறியாமல் உண்ணின்று ஊக்கும் நலம் புலப்பட, “அவரவர்தம் கருத்தில் ஒளித்திருக்கின்ற கள்வன்” என்றும் இசைக்கின்றார்.
இதனால், முனிவர்களுக்கும், பிரமர்கள் முதலிய தேவ தேவர்களுக்கும், சத்தி சத்திமான்களுக்கும் உள் நின்று ஒளிரும் சிவத்தின் சிறப்பைத் தெரிவித்தவாறாம். (7)
|