4011.

     கோணாத நிலையினராய்க் குறிகுணங்கண் டிடவும்
          கூடாத வண்ணம்மலைக் குகைமுதலாம் இடத்தில்
     ஊணாதி விடுத்துயிர்ப்பை அடக்கிமனம் அடக்கி
          உறுபொறிகள் அடக்கிவரும் உகங்கள்பல கோடித்
     தூணாக அசைதல்இன்றித் தூங்காது விழித்த
          தூயசதா நிட்டர்களும் துரியநிலை இடத்தும்
     காணாத வகைஒளித்த கள்வனைஎன் கண்ணால்
          கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன்                                         களித்தே.

உரை:

     நேர்மை குன்றாத நிலையினை யுடையவராயும், குறிகுணங்கள் காண்பதற் கியலாதவாறு மலைகளிலும் குகைகளிலும் பிற இடங்களிலும் ஊனுறக்கமின்றி உயிர்க்காற்றையும் மனத்தையும் பொறி புலன்களையும் அடக்கிப் பல கோடி யுகங்களாகத் தூண் போல் அசைவின்றித் தூங்கா திருக்கின்ற தூய சதா நிட்டர்களாயும் உள்ள பெரியோர்கள் துரியக் காட்சியினும் காண மாட்டாவாறு மறைந்து விளங்கும் கள்வனாகிய சிவ பெருமானைக் கண்களால் கண்ணாரக் கண்டு மனங் குழைந்து மகிழ்ந்து கண்டு கொண்டேன். எ.று.

     முதுகெலும்பு கோணாதபடி நிமிர்ந்திருந்து தலை சாயாமல் நேரிய நிலையில் அமர்ந்து யோகம்புரிதலின் யோகிகளை, “கோணாத நிலையினர்” என்று குறிக்கின்றார். அவர்கள் இருந்த நிலையில் அவர்களுடைய பெயரும் குணஞ் செயல்களும் அறிய முடியாத வகையில் இருப்பது பற்றி, “குறி குணம் கண்டிடவும் கூடாத வண்ணம்” எனவும், மலைகளிலும் மலைக் குகைகளிலும் தனித்திருந்து நிட்டை புரிவது அவர்களது இயல்பாதலால், “மலைக்குகை முதலாம் இடம்” எனவும், நிட்டையின்கண் ஊனுறக்கமின்றி மூச்சை யடக்கி மனத்தையும் ஒறிக்கிப் பொறி புலன்களின் சேட்டைகளை அடக்கி ஒழுகுதலால், “ஊனாதி விடுத்து உயிர்ப்பை அடக்கி மனம் அடக்கி உறு பொறிகள் அடக்கி” எனவும், இவ்வாறு நெடுங்காலம் யோகம் புரிவதால் அதனை, “உகங்கள் பல கோடி” எனவும், எத்தனைக் காலம் கழியினும் உடல்நிலை கெடாது அசைவின்றித் தூண் போலிருந்து நிட்டை புரிதலின், “தூணாக அசைதலின்றி” எனவும், இத்தனைக்கும் தளர்ச்சியால் தூங்குதலுமின்றிக் கண்மூடி மோனியாய் இருப்பது விளங்க, “தூங்காது விழித்த தூய சதா நிட்டர்கள்” எனவும் இயம்புகின்றார். சாக்கிரம் முதலாக அவத்தை ஐந்தையும் இயல்பாக யுடைய உயிர் இவ்யோக நிலையில் அவர் உடலின்கண் மேலும் கீழும் போக்குவரவு புரியினும் துரியாவத்தையில் ஞாவொளி பெற்று மெய்ப்பொருளைக் காணும் காட்சியினராயினும் அவர்களாலும் சிவபெருமான் காணப் படாமை தோன்ற, “தூய சதா நிட்டர்களும் துரிய நிலை இடத்தும் காணாத வகை ஒளித்த கள்வன்” என்று உரைக்கின்றார். சதா நிட்டர்கள், எக்காலத்தும் இடையறவின்றி யோகம் புரியும் பெரியோர்கள். இப்பெரியோர்களை, “ஞானிகளாய் உள்ளார்கள் நான்மறையை முழுதுணர்ந் தைம்புலன்கள் செற்று மோனிகளாய் முனிச் செல்வர்” (முதுகுன்) என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார்.

     இதனால், சதா நிட்டர்களின் துரியக் காட்சியிலும் காண்பரியன் சிவன் என்பது தெளிவித்தவாறாம்.

     (8)