4012.

     நீட்டாய சித்தாந்த நிலையினிடத் தமர்ந்தும்
          நிகழ்கின்ற வேதாந்த நெறியினிடத் திருந்தும்
     ஆட்டாய போதாந்தம் அலைவறுநா தாந்தம்
          ஆதிமற்றை அந்தங்கள் அனைத்தினும்உற் றறிந்தும்
     வேட்டாசைப் பற்றனைத்தும் விட்டுலகம் போற்ற
          வித்தகராய் விளங்குகின்ற முத்தர்கட்கும் தன்னைக்
     காட்டாமல் ஒளித்திருக்குங் கள்வனைஎன் கண்ணால்
          கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன்                                         களித்தே.

உரை:

     நெடிய ஆகமாந்தத்திலும் நிகழ்கின்ற வேதாந்த நெறியிலும், அசைகின்ற போதாந்தத்திலும், அசைவற்ற நாதாந்தம் முதலிய மற்ற அந்தங்கள் அனைத்திலும் பொருந்தி ஆராய்ந்தும், விருப்பத்தைச் செய்கின்ற ஆசை பற்று முதலிய எல்லாவற்றையும் விடுத்து, உயர்ந்தோர்கள் போற்றுகின்ற ஞானிகளாய் விளங்குகின்ற சீவன் முத்தர்களுக்கும் தன்னைக் காண வொண்ணாதபடி மறைத்துக் கொண்டு நிலவும் சிவ பரம்பொருளை என் கண்களால் கண்டு மனங் குழைந்து மகிழ்வுடன் கலந்து கொண்டேன். எ.று.

     சிவாகமங்கள் நெடிது பரந்து விரிந்து கிடத்தலின் அவற்றை, “நீட்டாய சித்தாந்தம்” என்றும், யாவராலும் எளிதில் பயிலப்படுவது பற்றி, “நிகழ்கின்ற வேதாந்த நெறி” என்று கூறுகின்றார். ஞானாசிரியனிடத்துப் பலகாற் பயின்று தீராத ஐயங்களால் அலைப்புண்டு ஞானம் பெறும் நெறி போதாந்தமாதல் பற்றி அதனை, “ஆட்டாய போதாந்தம்” எனவும், சிவ தத்துவத்தின் மத்தகத்திருக்கும் நாத தத்துவத்தின்கண் கருவி கரணங்கள் இன்றி ஆன்மா சாந்த நிலை பெறுவதால் அதனை, “அலைவறு நாதாந்தம்” எனவும் இசைக்கின்றார். ஏனை அந்தங்களாவன: யோகாந்தம், கலாந்தம் என்பன. சித்தாந்தம் முதலிய அந்தங்கள் ஆறும் சிவ பரம்பொருளைக் கண்டறிந் தடைதற்குரிய நிலைகளாதலின் அந்நிலைகளில் நின்றாடும் காண்பரியன் சிவன் என்பதற்கு அவற்றை எடுத்தோதுகின்றார். பெத்த நிலை, முத்தி நிலை என்ற இரண்டனுள் ஆசையும், பற்றும், அவலமும், கவலையும் பிறவும் நிறைந்த பெத்த நிலையைத் துறந்து ஒரு பற்றுமில்லாத முத்தி நிலையை அடைய முயலும் சீவன் புத்தர்களுக்கும் அப்பெருமான் பெறுதற் கருமையன் என்பது புலப்படுத்தற்கு, “வேட்டாசைப் பற்றனைத்தும் விட்டு உலகம் போற்ற வித்தகராய் விளங்குகின்ற முத்தர்கட்கும் தன்னைக் காட்டாமல் ஒளித்திருக்கும் கள்வன் என்று உரைக்கின்றார். இதன்கண் புத்தர் என்பது சீவன் முத்தர்களை.

     இதனால், சித்தாந்தம் முதலிய அந்தங்கள் ஆறினுள்ளும் முயல்கின்ற பெரியோர்களுக்கும், சீவன் முத்தர்களுக்கும் அடைதற் கரியவன் சிவன் என்று இயம்பியவாறாம்.

     (9)