4013. மருள்நெறிசேர் மலஉடம்பை அழியாத விமல
வடிவாக்கி எல்லாஞ்செய் வல்லசித்தாம் பொருளைத்
தருணமது தெரிந்தெனக்குத் தானேவந் தளித்த
தயாநிதியை எனைஈன்ற தந்தையைஎன் தாயைப்
பொருள்நிறைசிற் றம்பலத்தே விளங்குகின்ற பதியைப்
புகல்அரிதாம் சுத்தசிவ பூரணமெய்ச் சுகத்தைக்
கருணைஅருட் பெருஞ்சோதிக் கடவுளைஎன் கண்ணால்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
உரை: மயக்க நெறியின்கண் செல்லுகின்ற மலம் பொருந்திய உடம்பை, அழியாத மலமில்லாத தூய உடம்பாக்கி, எல்லாம் செய்யவல்லதாகிய சித்தாகிய ஞானப்பொருளைச் சமயமறிந்து எனக்குத் தானாகவே மனமுவந்து அளித்த அருட் செல்வரும், என்னைப் பெற்ற தந்தையும் தாயும், ஞானப் பொருள் நிறைந்த திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்குகின்ற தலைவனும், சொல்லுதற் கரிய சுத்த சிவ பூரணமாகிய மெய்ம்மைச் சுக வடிவினனும், கருணையாகிய அருட்பெருஞ் சோதிக் கடவுளுமாகிய சிவபெருமானைக் கண்ணாரக் கண்டு, மனம் முதலிய கரணங்கள் குழைந்து மகிழ்ந்து சிவ போகத்தில் கலந்து கொண்டேன். எ.று.
உணவின் பொருட்டு உழைப்பதும், உழைப்பின் பொருட்டு உறங்குவதும் செய்யு முகத்தால் மயக்க நெறியில் மன்னுயிரைச் செலுத்துதலால் உடம்பை, “மருள் நெறி சேர் உடம்பு” எனவும், அதன்கண் மலம் நிறைதலின், “மல வுடம்பு” எனவும் இயம்புகின்றார். மலப்பை போன்றதாயினும் இறக்கும் இயல்பினதாகிய உடம்பை இறவாத தூய உடம்பாக்கினமை புலப்பட, “மருள் நெறி சேர் மல வுடம்பை அழியாவிமல வடிவாக்கி” என்று கூறுகின்றார். மெய்ம்மைச் சிவஞானம் கைவரப் பெற்றார்க்குத் திருவருள் ஆற்றலால் எல்லாவற்றையும் இனிது எளிது செய்யும் திறம் உண்டாதலால், அதனை வடலூர் வள்ளலுக்கு இறைவன் அளித்தருளிய குறிப்பு விளங்க, “எல்லாம் செய் வல்ல சித்தாம் பொருளைத் தருணமது தெரிந்து எனக்குத் தானே வந்தளித்த தயாநிதி” என்றும், கொடுப்பவர் கொடுப்பது அரியதாயினும் எளியதாயினும் காலமறிந்து கொடுப்பது சிறப்பாதலால், “தருணமது தெரிந்து எனக்குத் தானே வந்தளித்த தயாநிதி” என்றும் மொழிகின்றார். திருச்சிற்றம்பலம் - தில்லைக்கண் உள்ள ஞான சபை. பொற் சபை எனினும் அமையும். சிவஞானத்தால் சிவபோகத்தைத் துய்ப்பவர்க்கு உளதாகும் மெய்ம்மைச் சுகம் குறைவற நிறைந்த இன்பமயமாக அளித்தலால் சிவனை, “சுத்த சிவ பூரண மெய்ச்சுகம்” என்று பராவுகின்றார். கருணையாகிய அருளொளியே தனது சிவப் பேரொளியாகக் கொண்டமை பற்றிச் சிவனை, “அருட் பெருஞ் சோதிக் கடவுள்” என்று விளக்குகிறார்.
இதனால், அருட் பெருஞ் சோதிக் கடவுளைக் கண்களாற் கண்டு அகம் குழைந்து ஆங்குப் பெருகும் இன்பத்தில் மகிழ்ந்து திளைத்தமை தெரிவித்தவாறாம். (10)
|