50. ஆண்டருளிய அருமையை வியத்தல்
அஃதாவது, அருட் பெருஞ் சோதிக் கடவுளாகிய இறைவன் தன்னைக் காணுமாறு காட்சி தந்து மனம் குழைவித்துத் தனது காட்சிக்கண் ஊறுகின்ற இன்பத்திற் கலந்து மகிழுமாறு அருளிய நலத்தை வியந்து பாராட்டுதலாம். இவ்வருட் பேற்றின் அருமையை வியந்த வடலூரடிகள் இப் பத்திலும் மேல்வரும் பத்திலும் ஆறாமையுற்றுப் பாடுகின்றார்.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 4014. அம்பலத் தாடும் அமுதமே என்கோ
அடியனேன் ஆருயிர் என்கோ
எம்பலத் தெல்லாம் வல்லசித் தென்கோ
என்னிரு கண்மணி என்கோ
நம்பிடில் அணைக்கும் நற்றுணை என்கோ
நான்பெற்ற பெருஞ்செல்வம் என்கோ
இம்பர்இப் பிறப்பே மெய்ப்பிறப் பாக்கி
என்னை ஆண் டருளிய நினையே.
உரை: இவ்வுலகில் இப்பொழுது எடுத்துள்ள என் பிறப்பையே இறவாப் பிறப்பாக்கி என்னை ஆண்டருளிய பெருமானாகிய உன்னை அம்பலத்தில் ஆடுகின்ற அமுதம் என்பேனோ; அடியவனாகிய என்னுடைய அருமையான உயிர் என்பேனோ; எம்மிடத்து எய்திய எல்லாம் வல்ல சித்தர் என்பேனோ; என்னுடைய இரண்டாகிய கண்மணி என்பேனோ; விரும்பிய வழி தழுவி அணைக்கும் நல்ல துணை என்பேனோ; நான் பெற்ற பெருஞ் செல்வம் என்பேனோ; என்னென்று சொல்லுவேன். எ.று.
அம்பலத்தில் ஆடுகின்ற பெருமானைக் காணும்போது மனத்தில் அமுதமயமான இன்ப உணர்ச்சி தோன்றுதலால், “அம்பலத்தாடும் அமுதமே என்கோ” என்று கூறுகின்றார். என்கோ - என்குஓ எனப் பிரியும். ஈற்றிலுள்ள ஓகாரம் வியப்பு குறித்து நின்றது. என்கு என்பது குற்றுகர வீற்றுத் தன்மை; ஒருமை வினைமுற்று. ஆருயிர் - பெறுதற் கரிதாகிய உயிர்; அருமை வாய்ந்த உயிர் எனினும் அமையும். எம்பலத்து - எம்மிடத்து. என்வலம் எனற் பாலது எம்பலம் என வந்தது. வலம் என்பது இடப் பொருளுணர்த்தும் இடைச் சொல். நம்புதல் - விரும்புதல். விருப்பம் மிக்கவிடத்து நண்பர்கள் ஒருவரை யொருவர் தழுவிக் கொள்ளும் இயல்பு பற்றி, “நம்பிடில் அணைக்கும் நற்றுணை” என்று இயம்புகின்றார். பெருஞ் செல்வத்தினிடத்து அதனைப் பெற்றார்க்குப் பெருவிருப்பம் உண்டாதல் பற்றி, “நான் பெற்ற பெருஞ் செல்வம்” என்று புகல்கின்றார். இவ்வுலகில் எய்தும் பிறப்புக்கள் யாவும் நிலையின்றிக் கெடுவதாகலின், “இம்பர் இப்பிறப்பு” என்று சுட்டிக் கூறுகின்றார். மெய்ப் பிறப்பு - இறவாப் பிறவி. அருள்கூர்ந்து தன்னை ஆண்டு கொண்டதால் தமது பிறப்பு அழியாப் பிறப்பாகியது என்பாராய், “மெய்ப்பிறப் பாக்கி என்னை ஆண்டருளிய நின்னை” என வுரைக்கின்றார். நின்னை “அமுதமே ஆருயிரே சித்தே கண்மணியே நற்றுணையே பெருஞ் செல்வமே என்கோ” என இயையும்.
இதனால், தமது பிறப்பை அழியா இயல்பினதாக்கி ஆண்டருளிய சிவபெருமானுடைய திருவருளை வியந்தவாறாம். இதனையே இனி வரும் பாட்டுக்கள் எல்லாவற்றுக்கும் கருத்தாகக் கூறிக் கொள்க. (1)
|