4016.

     எய்ப்பிலே கிடைத்த வைப்பது என்கோ
          என்னுயிர்க் கின்பமே என்கோ
     துய்ப்பிலே நிறைந்த பெருங்களிப் பென்கோ
          சோதியுட் சோதியே என்கோ
     தப்பெலாம் பொறுத்த தயாநிதி என்கோ
          தனிப்பெருந் தலைவனே என்கோ
     இப்பிறப் பதிலே மெய்ப்பயன் அளித்திங்
          கென்னைஆண் டருளிய நினையே.

உரை:

     இப்பிறப்பிலேயே பெறுதற்குரிய இறவா நிலையாகிய மெய்ப் பயனை எனக்கு அளித்து, என்னை ஆண்டு கொண்டருளிய பெருமானாகிய உன்னைத் தளர்ச்சி யுற்ற பொழுதில் கிடைத்த செல்வ மென்பேனோ; என்னுயிர்க்குரிய இன்பம் என்பேனோ; நுகர் பொருளை நுகருமிடத்து மனத்தின்கண் நிறைகின்ற மிக்க பெரும் மகிழ்ச்சி என்பேனோ; சோதியுட் சோதி என்பேனோ; யாம் செய்த தவறுகள் எல்லாவற்றையும் பொறுத்தாளும் அருள் நிதி என்று சொல்வேனோ; தனிப் பெருந் தலைவன் என்பேனோ; யாது சொல்லி மகிழ்வேன். எ.று.

     எய்ப்பு - தளர்ச்சி. வைப்பு - செல்வம். இதனைச் சேமநிதி என்று கூறுவர். துய்ப்பு - நுகர் பொருளை நுகர்தல். அனுபவித்தற்குரிய பொருள்களை நன்கு அனுபவிக்கும் இடத்து அனுபவிப்பவர் மனத்தின்கண் மிக்க மகிழ்ச்சி உண்டாதலின் அதனை, “துய்ப்பிலே நிறைந்த பெருங் களிப்பு” என்று சொல்லுகிறார். பெருமை - ஈண்டு மிகுதி குறித்து நின்றது. ஒளிப் பொருளுக் கெல்லாம் ஊன ஒளியாய் நிற்பதாகலின் சிவபர ஒளியை, “சோதியுட் சோதியே என்கோ” என்று பராவுகின்றார். தப்பு - தவறு. தயாநிதி - அருட் செல்வம். சிவனுக்கு ஒப்பாகவோ உயர்வாகவோ தலைவர் வேறு இல்லாமை விளங்க, “தனிப் பெருந் தலைவனே என்கோ” என்று சாற்றுகின்றார். இப்பிறப்பின்கண் பெறுவன யாவும் நிலையின்றிக் கெடுவதால் இறவாமையாகிய நிலைத்த பயனை, “மெய்ப்பயன்” என்று விளம்புகின்றார். எய்ப்பில் வைப்பு, என்னுயிர்க் கின்பம், பெருங் களிப்பு, சோதியுட் சோதி, தயாநிதி, தனிப் பெருந் தலைவன் என்கோ என இயைக்க.

     (3)