4017.

     அச்சம்நீக் கியஎன் ஆரியன் என்கோ
          அம்பலத் தெம்பிரான் என்கோ
     நிச்சலும் எனக்கே கிடைத்தவாழ் வென்கோ
          நீடும்என் நேயனே என்கோ
     பிச்சனேற் களித்த பிச்சனே என்கோ
          பெரியரிற் பெரியனே என்கோ
     இச்சகத் தழியாப் பெருநலம் அளித்திங்
          கென்னைஆண் டருளிய நினையே.

உரை:

     இவ்வுலகத்தில் என்றும் அழியாமையாகிய பெரிய நன்மையை எனக்குத் தந்து, என்னை ஆண்டருளிய பெருமானாகிய உன்னை எனக்குளதாகிய அச்சத்தைப் போக்கி யருளிய உயர்ந்தவன் என்று சொல்வேனோ? அம்பலத்தில் ஆடல் புரிகின்ற எம்பிரான் என்பேனோ? நாள்தோறும் இன்பமுற எனக்குக் கிடைத்த வாழ்முதல் என்பேனோ? அன்பு பெருகும் எனக்கு நண்பன் என்பேனோ? பித்தனாகிய எனக்குக் கிடைத்த பெரும் பித்தன் என்பேனோ? பெருமை மிக்க பெரியோர்களுக் கெல்லாம் பெரியவன் என்பேனோ? யாது சொல்லி ஏத்துவேன். எ.று.

     சகம் - உலகம். அழியும் பொருள்கள் நிறையும் உலகத்தில் அழியாமையினும் பெரிய நன்மை வேறு இல்லாமையால் அதனை, “இச்சகத் தழியாப் பெருநலம்” என்று இயம்புகின்றார். ஆரியன் - அருமை யுடையவன்; மேலோன் என்றுமாம். நித்தம் என்பது நிச்சல் என வருவதுண்மையின் நிச்சலும் என உரைக்கின்றார். நாள்தோறும் அன்பு பெருக நட்புச் செய்தல் பற்றிச் சிவபெருமானை, “நீடும் என் நேயன்” என்று கூறுகின்றார். அல்லும் பகலும் ஆண்டவன் திருவருளில் ஆசை மீதூர்ந்து ஒழுகுதலால் வடலூர் வள்ளல் தம்மைப் “பிச்சன்” என்றும், தமக்கு அப் பித்து நாளும் மிகுவித்தலால் சிவ பெருமானையும் “பிச்சன்” என்றும், அப்பெருமானை விடப் பெரியவர் பிறரில்லை என்பது பற்றி, “பெரியரிற் பெரியன்” என்றும் உரைக்கின்றார். பிச்சன் என்றவிடத்து எளிமை போக்குதற்குப் “பெரியரிற் பெரியன்” என அடுத்து மொழிகின்றார் என உரைத்தலும் ஒன்று. ஆரியன், எம்பிரான், நேயன், பிச்சன், பெரியன் என்கோ என இயையும்.

     (4)