4018.

     அத்தம்நேர் கிடைத்த சுவைக்கனி என்கோ
          அன்பிலே நிறைஅமு தென்கோ
     சித்தெலாம் வல்ல சித்தனே என்கோ
          திருச்சிற்றம் பலச்சிவம் என்கோ
     மத்தனேன் பெற்ற பெரியவாழ் வென்கோ
          மன்னும்என் வாழ்முதல் என்கோ
     இத்தனிப் பிறப்பை நித்தியம் ஆக்கி
          என்னைஆண் டருளிய நினையே.

உரை:

     இந்த என் பிறப்பை அழியா இயல்பினதாக்கி என்னை ஆண்டு கொண்டருளிய பெருமானாகிய உன்னை அங்கையில் பெற்ற சுவை மிக்க பழம் என்று சொல்வேனோ; அன்பு நிறைந்த அமுதம் என்பேனோ; சித்துக்கள் எல்லாவற்றையும் செய்ய வல்ல சித்தன் என்பேனோ; தில்லையம்பலத்தில் ஆடல் புரிகின்ற சிவ பரம்பொருள் என்பேனோ; மதி மயங்கிய யான் பெற்ற பெரிய வாழ்பொருள் என்பேனோ; என்னுடைய நிலைத்த வாழ்முதல் என்பேனோ; யாது சொல்லிப் புகழ்வேன். எ.று.

     அத்தம் - கை; சுவைக் கனி - சுவை நிறைந்த பழம். நெல்லிக் கனி எனினும் அமையும். சித்துக்கள் - அணிமா மகிமா முதலியன, தில்லையம்பலத்தில் காட்சி வழங்கும் கூத்தப் பெருமான் சிவ பரம்பொருளாதலின், “சிற்றம்பலச் சிவம் என்கோ” என்று தெரிவிக்கின்றார். “சித்தர் சூழச் சிவபிரான் தில்லை மூதூர் நடம் செய்வான்” (சென்னி) என்று மணிவாசகப் பெருமான் உரைத்தலால், தில்லைச் சிற்றம்பலத்தை நினைக்கும் வடலூர் வள்ளல் சித்தர் கணத்தை நினைந்து, “சித்தெலாம் வல்ல சித்தனே” என்று சொல்லுகின்றார். மத்தன் - பித்தேறியவன்; பித்தன் எனினும் பொருந்தும். வாழ்வளிக்கும் பரம்பொருளாதலின் இறைவனை, “பெரிய வாழ்வு” என்றும், உயிர்கள் பெறும் வாழ்வுகள் எல்லாவற்றுக்கும் முதற் பொருளாதல் பற்றிச் சிவபெருமானை, “மன்னும் வாழ்முதல்” என்றும் மகிழ்ந்துரைக்கின்றார். சுவைக் கனி, நிறையமுது, எல்லாம் வல்ல சித்தன், சிற்றம்பலம் சிவம், பெரிய வாழ்வு, வாழ்முதல் என்கோ என இயையும்.

     (5)