4019.

     மறப்பெலாம் தவிர்த்த மதிஅமு தென்கோ
          மயக்கநீத் தருள்மருந் தென்கோ
     பறப்பெலாம் ஒழித்த பதிபதம் என்கோ
          பதச்சுவை அனுபவம் என்கோ
     சிறப்பெலாம் எனக்கே செய்ததாய் என்கோ
          திருச்சிற்றம் பலத்தந்தை என்கோ
     இறப்பிலா வடிவம் இம்மையே அளித்திங்
          கென்னைஆண் டருளிய நினையே.

உரை:

     இறப்பில்லாத வடிவத்தை இப்பிறப்பிலேயே எனக்கு அளித்தருளிய இறைவனாகிய உன்னை மறதி வகை எல்லாவற்றையும் நீக்கி யருளிய ஞானவமுதம் என்று சொல்வேனோ; மயக்க மெல்லாம் போக்கி யருளிய மருந்தென்று சொல்வேனோ; எங்கும் பறந்து செல்லும் ஆசைகளைப் போக்கி யருளிய பதிபதம் என்று சொல்வேனோ; திருவடி இன்ப அனுபவம் என்று சொல்வேனோ; எல்லா வகையான சிறப்புக்களையும் எனக்கே செய்தருளிய தாய் என்று சொல்வேனோ; திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளும் தந்தை என்று சொல்வேனோ; யாது சொல்லிப் புகழ்வேன். எ.று.

     சிவஞான வடிவம் இறத்தலில்லாத பெருவடிவமாதலின் அவற்றைத் தனக்கு அருளினமை பற்றி, வடலூர் வள்ளல் சிவபெருமானை, “இறப்பிலா வடிவம் இம்மையே அளித்திங் கென்னை ஆண்டருளிய நின்னை” என்று புகழ்கின்றார். முக்குண வயத்தால் முறை திரிந்து மறத்தல் உயிர் இயல்பாதலால் மறவா நிலைமையைத் தந்தமை விளங்க, “மறப்பெலாம் தவிர்த்த மதியமுது என்கோ” என்றும், மாயை காரணமாக மறப்பு வகைகள் தோன்றுவது பற்றி அவற்றிற்குக் காரணமாகிய மயக்கத்தையும் போக்கினமை புலப்பட, “மயக்கம் நீத்தருள் மருந்து என்கோ” என்றும் இயம்புகின்றார். பறப்பு நாற்றிசையும் பறந்து திரியும் பறவைகளைப் போல ஆசைகள் தோன்றி எல்லாப் பொருள் மீதும் பரவுவதால் அவை அங்ஙனம் தோன்றி அலைக்காவண்ணம் மனத் திண்மையைத் தந்தமையின் சிவனது திருவருளை, “பறப்பெலாம் ஒழித்த பதிபதம் என்கோ” என்றும், திருவருள் இன்ப அனுபவத்தை, “பதச்சுவை அனுபவம் என்கோ” என்றும் சொல்லுகின்றார். எவ்வுயிர்க்கும் தந்தையாதலின் கூத்தப் பெருமானை, “திருச்சிற்றம்பலத் தந்தை” என்று உரைக்கின்றார். மதியமுது, அருள் மருந்து, பதி பதம், பதவனுபவம், தாய் தந்தை, என்கோ என இயையும்.

     (6)