4020.

     அன்பிலே பழுத்த தனிப்பழம் என்கோ
          அறிவிலே அறிவறி வென்கோ
     இன்பிலே நிறைந்த சிவபதம் என்கோ
          என்னுயிர்த் துணைப்பதி என்கோ
     வன்பிலா மனத்ே­த வயங்கொளி என்கோ
          மன்னும்அம் பலத்தர சென்கோ
     என்புரி அழியாப் பொன்புரி ஆக்கி
          என்னைஆண் டருளிய நினையே.

உரை:

     என்னுடைய உடம்பை அழிதல் இல்லாத பொன்னுடம்பாக்கி, ஆண்டு கொண்ட ஐயனாகிய உன்னை அன்பாகிய மரத்திலே பழுத்த தனிப் பழம் என்று சொல்வேனோ; அறிவால் அறியப்படுவதாகிய மெய்யுணர்வு என்று சொல்வேனோ; இன்பம் நிறைந்த நிலையமாகிய சிவபதம் என்று சொல்வேனோ; என் உயிர்க்கு உறுதுணையாகிய முதல்வன் என்று மொழிவேனோ; வன்கண்மை யில்லாத நன்மனத்தின்கண் விளங்குகின்ற தெய்வ ஒளி என்பேனோ; நிலை பெற்ற அம்பலத்தின்கண் எழுந்தருளும் அரசென்று சொல்வேனோ; யாது சொல்லிப் பாராட்டுவேன். எ.று.

     புரி - உடம்பு. ஞானவான்களின் உடம்பு பொன்னிறம் கொண்டு பொலிவுறுவது பற்றி அதனை, “பொன் புரி” என்கிறார். சிவபெருமானுடைய திருமேனியும் பொன்னிறமுடையதாதல் பற்றிச் சிவ மயமான தனது தேகத்தை, “பொன் புரியாக்கி” என்றும், அஃது எக்காலத்தும் பொன்றாப் பெருமை யுடையது என்பது பற்றி, “அழியாப் பொன் புரி” என்றும் புகல்கின்றார். “அன்பிலே பழுத்த தனிப் பழம்” என்பது ஏகதேச உருவகம். அறிவால் அறிவின்கண் அறிவது உண்மை யறிவாதலால், “அறிவிலே அறிவறிவு” எனவும், இன்ப நிலையம் சிவானுபவப் பெரும் பதம் எனச் சான்றோர் கூறுவதால் அதனை, “இன்பிலே நிறைந்த சிவபதம்” எனவும், அது தானும் உயிர்கட்கு உயிர்த் துணையாய் உதவுவது பற்றி, “என் உயிர்த் துணைப் பதி” எனவும் ஓதுகின்றார். வன்பிலா மனம் - வன்கண்மை யில்லாத மென்மை சான்ற அன்பு மனம். உண்மை யன்பு ஞானமாம் எனச் சான்றோர் உரைப்பது பற்றிச் சிவத்தை, “வன்பிலா மனத்தே வயங் கொளி” எனக் கூறுகின்றார். தனிப் பழம், அறிவறிவு, சிவபதம், துணைப் பதி, வயங் கொளி, அம்பலத் தரசு என்கோ என இயையும்.

     (7)