4021.

     தடையிலா தெடுத்த அருளமு தென்கோ
          சர்க்கரைக் கட்டியே என்கோ
     அடைவுறு வயிரக் கட்டியே என்கோ
          அம்பலத் தாணிப்பொன் என்கோ
     உடைய மாணிக்கப் பெருமலை என்கோ
          உள்ளொளிக் குள்ளொளி என்கோ
     இடைதல்அற் றோங்கும் திருஅளித் திங்கே
          என்னைஆண் டருளிய நினையே.

உரை:

     நீங்குதலின்றி நின்று ஓங்குகின்ற திருவருள் ஞானமாகிய செல்வத்தை எனக்களித்து, ஆண்டருளிய பெருமானாகிய நின்னைச் சிறு தடையுமின்றி யான் பெற்றுக் கொள்ள அமைந்த திருவருள் ஞானமாகிய அமுத மென்று உரைப்பேனோ; சர்க்கரைக் கட்டி என உரைப்பேனோ; என்பால் தானே வந்து அடைந்து பொருந்துகின்ற வைரக் கல் என்பேனோ; அம்பலத்தில் ஆடுகின்ற ஆணிப் பொன் என்று உரைப்பேனோ; எனக்கே உரிய மாணிக்கப் பெருமலை என்று உரைப்பேனோ; உள்ளத்தே ஒளிர்கின்ற ஒளியின் உள்ளொளி என்று உரைப்பேனோ; யாதென்று உரைத்து மகிழ்வேன். எ.று.

     இடைதல் - ஈண்டு நீங்குதல் என்னும் பொருட்டு. சிவனது திருவருள் ஞானம் “சென்றடையாத திரு” என்று தெரிவிக்கப்படுதலால் அதனை “இடைதலற்று ஓங்கும் திரு” என்று கூறுகின்றார். தடையின்றிப் பெற அமைந்தது பற்றி, “தடையிலா தெடுத்த அருளமுது” என்றும், இனிமை பற்றி, “சர்க்கரைக் கட்டி” என்றும், விலை மதிப்பில்லாத அருமை பற்றி “அடைவுறு வயிரக் கட்டி” என்றும், அம்பலத்தே காணப் பெறுதலின், “அம்பலத்து ஆணிப் பொன்” என்றும், மாணிக்க மலை போல் விளங்குதலின், “மாணிக்கப் பெருமலை” என்றும், உள்ளத்தின் உள்ளே உள்ளொளியாய் விளங்குதல் தோன்ற, “உள்ளொளிக்கு உள்ளொளி” என்றும் உரைக்கின்றார். அருளமுது, சர்க்கரைக் கட்டி, வைரக் கட்டி, ஆணிப் பொன், உள்ளொளி என்கோ என இயையும்.

     (8)