4022.

     மறைமுடி விளங்கு பெரும்பொருள் என்கோ
          மன்னும்ஆ கமப்பொருள் என்கோ
     குறைமுடித் தருள்செய் தெய்வமே என்கோ
          குணப்பெருங் குன்றமே என்கோ
     பிறைமுடிக் கணிந்த பெருந்தகை என்கோ
          பெரியஅம் பலத்தர சென்கோ
     இறைமுடிப் பொருள்என் உளம்பெற அளித்திங்
          கென்னைஆண் டருளிய நினையே.

உரை:

     இறைமைத் தன்மை யுடைய தெய்வப் பொருள்களுக்கெல்லாம் முடிப் பொருளாக வுள்ள தன்மை என் உள்ளத்திலே நான் பெறுமாறு அளித்தருளிய பெருமானாகிய உன்னை வேத முடியில் விளங்குகின்ற பெரும் பொருள் என்று மொழிவேனோ; நிலை பெற்ற ஆகமாந்தப் பொருள் என்று மொழிவேனோ; எனக்கு இன்றியமையாத செயல்களைச் செய்து முடிக்க வல்ல வன்மையைத் தந்து அருள் செய்கின்ற தெய்வம் என்று மொழிவேனோ; பெரிய குணக் குன்றம் என்று பேசுவேனோ; பிறைச் சந்திரனை முடியில் அணிந்து விளங்குகின்ற பெருந்தகை என்று மொழிவேனோ; அம்பலத்தின்கண் விளங்குகின்ற பெரிய அரசு என்று மொழிவேனோ; யாதென்று சொல்லிப் புகழ்வேன். எ.று.

     தேவ தேவர்களுக் கெல்லாம் தலை சிறந்த தேவனாதலின் சிவபெருமானை, “இறைமுடிப் பொருள்” என்று இயம்புகின்றார். இறைமுடிப் பொருள், இறைவன் என ஞான நூல்களால் முடிவு செய்யப்பெற்ற பரம்பொருள் என்பதும் உண்டு. தன்னை யான் கண்டு இன்புறுமாறு என் உள்ளத்தில் எழுந்தருளுகின்றான் என்ற உண்மை புலப்பட, “இறைமுடிப் பொருள் என்னுளம் பெற அளித்து இங்கு என்னை ஆண்டருளிய நின்னை” என்று இசைக்கின்றார். மறைமுடி - வேதாந்தம். பெரும் பொருள் - பிரம்மப் பொருள். ஆகமப் பொருள் - ஆகமாந்தங்களில் காணப்படும் சிவ பரம்பொருள். குறை - இன்றியமையாத பொருள்; செயலுமாம். பெரும் பொருள், ஆகமப் பொருள், தெய்வம், குணக் குன்றம், பெருந்தகை, அம்பலத் தரசு என்கோ என இயையும்.

     (9)