4023.

     என்உளம் பிரியாப் பேரொளி என்கோ
          என்உயிர்த் தந்தையே என்கோ
     என்உயிர்த் தாயே இன்பமே என்கோ
          என்உயிர்த் தலைவனே என்கோ
     என்உயிர் வளர்க்கும் தனிஅமு தென்கோ
          என்னுடை நண்பனே என்கோ
     என்ஒரு வாழ்வின் தனிமுதல் என்கோ
          என்னைஆண் டருளிய நினையே.

உரை:

     எளியனாகிய என்னை ஆண்டு கொண்டருளிய பெருமானாகிய உன்னை என் உள்ளத்தினின்றும் பிரியாமல் ஒளிரும் பெரிய ஒளி என்று சொல்லுவேனோ; என் உயிர்க்குத் தந்தை என்றும் தாய் என்றும் சொல்லுவேனோ; யான் பெறும் இன்பம் என்று சொல்லுவேனோ; என்னுயிர்க்குத் தலைவன் என்றும், என் உயிரை வளர்க்கின்ற தனி ஞான அமுது என்றும், நண்பன் என்றும் சொல்லுவேனோ; என்னுடைய சிறிய வாழ்வுக்கும் தனிமுதல்வன் நீ என்று சொல்லுவேனோ; யாது சொல்லி ஏத்துவேன். எ.று.

     சிவஞானம் உள்ளொளியாய் உள்குவார் உள்ளத்தின்கண் ஒளிர்வது பற்றி, “என்னுளம் பிரியாப் பேரொளி” எனவும், உயிர் வளர்ச்சி என்பது ஞானத்தால் உயர்தலாதலால் ஞானமாகிய அமுதளித்து ஓங்குவிக்கும் பெருமானை, “என்னுயிர் வளர்க்கும் தனியமுது என்கோ” எனவும், தமது வாழ்வு மிகச் சிறுமை யுடையதாயினும் அதனைச் சிவபெருமான் முதல்வனாய் நின்று வாழச் செய்வது விளங்க, “என் ஒரு வாழ்வின் தனிமுதல்” எனவும் இயம்புகின்றார். பேரொளி, தந்தை, தாய், இன்பம், தலைவன், தனியமுது, நண்பன், தனிமுதல் என்கோ என இயையும்.

     (10)