51. இறைவனை ஏத்தும் இன்பம்

    அஃதாவது, இறைவனாகிய பரம்பொருளை, எண்ணிப் பராவி ஏத்துமிடத்து உளதாய் அனுபவிக்கப்படும் இன்பம் என்பதாம். சொற்களால் சொல்லித் துதிப்பதிலும், சொற்களாலாகிய பாட்டுக்களை அமைத்தும், பாடியும் பெறும் இன்பம் பெரிய தொன்றாகலின் அதனை இப் பத்தின்கண் விதந்தோதுகின்றார். இப் பத்தினை ஆற்றாமை கூறல் என்றும் கூறுவர்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

4024.

     கருணைமா நிதியே என்னிரு கண்ணே
          கடவுளே கடவுளே என்கோ
     தருணவான் அமுே­த என்பெருந் தாயே
          தந்தையே தந்தையே என்கோ
     தெருள்நிறை மதியே என்குரு பதியே
          தெய்வமே தெய்வமே என்கோ
     அருள்நிறை தரும்என் அருட்பெருஞ் ஜோதி
          ஆண்டவ நின்றனை அறிந்ே­த.

உரை:

     திருவருள் நிறைந்த என்னுடைய அருட்பெருஞ் சோதி ஆண்டவனாகிய நின்னை நன்கறிந்து கருணையாகிய பெருஞ் செல்வமே, என்னுடைய இரண்டாகிய கண்ணே, கடவுளே என்று போற்றுவேனோ; சமயத்தில் வாய்த்த வான அமுதமே; என்னுடைய பெரிய தாயே, தந்தையே என்று சொல்லுவேனோ; தெளிவு நிறைந்த மதியமே; என்னுடைய குருபரனே, தெய்வமே என்று உரைப்பேனோ; என்னென்று சொல்லுவேன். எ.று.

     திருவருட் செல்வமாகிய இன்பம் நிறைந்திருத்தல் பற்றி, “அருள் நிறை தரும் என் அருட் பெருஞ் சோதி ஆண்டவ” என்றும், நினது அருள் நலத்தை அறிந்த பிறகு எனக்கு உளதாகும் இன்பத்தால் உன்னைப் பாராட்டுதல் வேண்டு மென்னும் ஆசை எழுகின்றது என்று கூறுவாராய், “ஆண்டவ நின்றனை அறிந்து” என்றும் இயம்புகின்றார். திருவருளையே மிகப் பெரும் செல்வமாகப் பெரியோர் கூறுவதால் சிவபிரானை, “கருணை மாநிதியே” என்று உரைக்கின்றார். காண்டற்கரிய பொருளனைத்தையும் நன்கு காணக் காட்டுவது பற்றி, “என் இரு கண்ணே” எனவும், கருவி கரணங்களால் காணப்படும் பொருள்கள் அனைத்தையும் கடந்து நிற்றலை யுணர்தலால், “கடவுளே கடவுளே” எனவும் பாராட்டுகின்றார். வானமுது - வானுலகத்தில் தேவர்களால் நுகரப்படும் அமுதம். தக்க காலத்தில் அது கிடைக்கப் பெற்றால் தேவர்களும், தேவ தேவர்களும் எய்தும் இன்பத்தைத் தாம் பெறுவது போலும் இன்பம் பெறுதலின், “தருண வானமுதே” என இறைவனைப் புகழ்கின்றார். தருணம் - தக்க சமயம். உலகியல் சந்திரனில் களங்கமிருந்து அதன் ஒளியைக் குறைப்பது போலின்றிக் களங்கம் ஒரு சிறிதும் இன்றித் தெளிந்த ஞானப் பேரொளியைச் செய்தலால் சிவ பரம்பொருளை, “தெருள் நிறை மதி” என்றும், ஞானம் அருளும் நலம் பற்றி, “குருபதியே” என்றும், ஞானப் பேற்றால் அடி பணிந்து வணங்கச் செய்தலின், “தெய்வமே தெய்வமே” என்றும் பாராட்டுகின்றார். அருட் பெருஞ் சோதி ஆண்டவனே நின்னை யறிந்து, “மாநிதியே, இரு கண்ணே, கடவுளே, வான் அமுதே, பெருந்தாயே, தந்தையே, மதியே, குருபதியே, தெய்வமே என்கோ” என இயைக்க.

     (1)