4025. ஒட்டியே என்னுள் உறும்ஒளி என்கோ
ஒளிஎலாம் நிரம்பிய நிலைக்கோர்
வெட்டியே என்கோ வெட்டியில் எனக்கு
விளங்குறக் கிடைத்தஓர் வயிரப்
பெட்டியே என்கோ பெட்டியின் நடுவே
பெரியவர் வைத்ததோர் தங்கக்
கட்டியே என்கோ அம்பலத் தாடும்
கருணையங் கடவுள்நின் றனையே.
உரை: அம்பலத்தில் ஆடுகின்ற கருணை யுருவாகிய கடவுளே! உன்னை என்னுள் ஒட்டி நின்று நிலவும் பேரொளி என்று புகழ்வேனோ; ஒளி வகைகள் எல்லாம் நிறைந்த நிலையத்திற்குச் செல்லும் ஒரு வழி என்று உரைப்பேனோ; அவ்வழியில் எனக்கு விளக்கம் உண்டாகக் கிடைத்த ஒரு வைரம் வைத்த பெட்டி என்று போற்றுவேனோ; அப்பெட்டியின் நடுவில் ஞானவான்களாகிய பெரியோர் வைத்ததொரு தங்கக் கட்டி என்று சாற்றுவேனோ; என்னவென்று பாராட்டுவேன். எ.று.
தனக்குள் நோக்கும் வடலூர் வள்ளலுக்குத் தம்மைப் பிரியாத ஓர் ஒளி நிறைந்து தோன்றுதல் கண்டு அஃது அருளொளி என உணர்கின்றாராதலால் அதனை, “என்னுள் ஒட்டி உறும் ஒளி என்கோ” என எடுத்துரைக்கின்றார். அவ்வொளிக்குள் ஒளி வகை பலவும் நிறைந்து ஒளிக்கெலாம் பொதுவாய் அமைந்த ஒளி நிலையம் தோன்றி அதனை அடைதற்கு ஒரு வழியும் தோன்றக் காண்கின்றாராதலால் அதனை, “ஒளியெலாம் நிரம்பிய நிலைக்கு ஓர் வெட்டி” என்று இயம்புகின்றார். மண்ணையும் தூறுகளையும் வெட்டிச் செய்யப் பட்டவை “வெட்டி” எனப்படும். மாயையின் இருட் செறிவின்கண் வெட்டிப் பிளந்து செய்யப்பட்ட ஞான ஒளி நெறியை இங்கே, “ஒளியெலாம் நிரம்பிய நிலைக்கோர் வெட்டி” என விளம்புகின்றார். அவ்வெட்டி வழியாகச் சிவத்தை அடையச் செல்லும் தமது ஆன்மாவுக்குத் தடையின்றிச் செல்லுதற் கேற்ற ஒளியொடு கூடிய வைரப் பெட்டி போல் அருள் ஞானப் பிரபை தோன்றுதலால் அங்ஙனம் தோன்றும் சிவத் தோற்றத்தை, “வெட்டியில் எனக்கு விளங்குறக் கிடைத்த ஓர் வைரப் பெட்டியே” என வழுத்துகின்றார். அந்தச் சிவஞானப் பிரபையின் நடுவே பொன்னிறம் கொண்டு சிவம் பொலிதலின், “பெட்டியின் நடுவே பெரியவர் வைத்ததோர் தங்கக் கட்டியே” எனவும், சிவத்தின் நிறம் பொன்னிறமாதலின் அதனை, “தங்கக் கட்டி” எனவும் இயம்புகின்றார். ஒளி, வெட்டி, வைரப் பெட்டி, தங்கக் கட்டி என்கோ என இயையும். (2)
|