4026.

     துன்பெலாம் தவிர்த்த துணைவனே என்கோ
          சோதியுட் சோதியே என்கோ
     அன்பெலாம் அளித்த அன்பனே என்கோ
          அம்மையே அப்பனே என்கோ
     இன்பெலாம் புரிந்த இறைவனே என்கோ
          என்உயிர்க் கின்அமு தென்கோ
     என்பொலா மணியே என்கணே என்கோ
          என்னுயிர் நாதநின் றனையே.

உரை:

     என் உயிர்க்கு நாதனாகிய உன்னை எனக்குற்ற துன்பங்கள் எல்லாவற்றையும் போக்கிய துணைவன் என்று சொல்வேனோ; ஒளிப் பொருட்கள் எல்லாவற்றிற்கும் உள்ளொளி என்று உரைப்பேனோ; அன்பு முழுதும் எனக்களித்த அன்பன் என்று சொல்வேனோ; அம்மை என்றும் அப்பன் என்றும் ஆதரித்து உரைப்பேனோ; இன்பங்கள் எல்லாவற்றையும் எனக்களித்த இறைவன் என்று சொல்வேனோ; என் உயிர்க்கு இனிய அமுதம் என்று இசைப்பேனோ; எனக்குக் கிடைத்த துளைபடாத மணி என்று சொல்வேனோ; என் கண் என்று சொல்வேனோ; யாது என்று கூறுவேனோ. எ.று.

     மனம், மெய், மொழி என்ற மூன்றன் அசைவாலும், அசைவின்மையாலும் வினை தோன்றித் துன்பங்களைச் செய்தலின் அவற்றை, “துன்பெலாம்” என்றும், துணைவனாய் நின்று அத்துன்பங்களைப் போக்கினமை விளங்க, “துன்பெலாம் தவிர்த்த துணைவனே” என்றும் கூறுகின்றார். ஒளியுற்றுத் திகழும் உலகிலுள்ள ஒளிப் பொருட்கள் எல்லாவற்றிற்கும் உள்ளொளியாய் நின்று ஒளிரச் செய்வது புலப்பட, “சோதியுட் சோதியே” என்று சொல்லுகின்றார். அன்புற்று இன்பமனைத்தையும் நல்குதலால், “அன்பெலாம் அளித்த அன்பனே” எனவும், “இன்பெலாம் புரிந்த இறைவனே” எனவும் இசைக்கின்றார். உணர்வு வடிவினதாகிய உயிர்க்கு அதன் உணர்வின்கண் ஞானமாய் இன்பம் செய்தலின், “என்னுயிர்க்கு இன்னமுது என்கோ” எனக் கூறுகின்றார். பொலா மணி - பொள்ளாத மணி. உலகியல் மணிகள் துளைத்தும் சாணையில் தீட்டியும் செம்மை செய்யப்படுவது போலாது இயல்பாகவே செம்மையும் அழகும் ஒளியும் கொண்டு திகழும் மாணிக்க மணி போல்வதால் சிவ பெருமானை, “பொலா மணி” எனப் புகழ்கின்றார். ஊனக் கண் உலகியற் பொருள்களைக் காட்டுதல் போல ஞானக் கண்ணாய் ஞானக் காட்சியை வழங்குதலால், “என் கண்ணே” என்று ஏத்துகின்றார். துணைவன், அம்மை, அப்பன், இறைவன், இன்னமுது, பொலா மணி, என் கண்ணே என்கோ என இயையும்.

     (3)