4027. கருத்தனே எனது கருத்தினுக் கிசைந்த
கணவனே கணவனே என்கோ
ஒருத்தனே எல்லாம் உடையநா யகனே
ஒருதனிப் பெரியனே என்கோ
திருத்தனே எனது செல்வமே எல்லாம்
செயவல்ல சித்தனே என்கோ
நிருத்தனே எனக்குப் பொருத்தனே என்கோ
நிறைஅருட் சோதிநின் றனையே.
உரை: நிறைந்த திருவருளால் ஒளி நிறைந்தொளிரும் சிவ பரம்பொருளாகிய உன்னை என் கருத்தில் எழுந்தருள்பவனே, என் கருத்துக்கு ஏற்ற கணவனே என்று சொல்லுவேனோ; ஒப்பற்றவனே, உலகங்கள் எல்லாவற்றையும் தனக்கு உடைய தலைவனே, ஒப்பற்ற பெருமையுடையவனே என்று சொல்லுவேனோ; உயர்ந்தவனே, எனது செல்வனே, அரிய செயல்கள் எல்லாவற்றையும் செய்ய வல்ல சித்தர் பெருமானே என்று சொல்லுவேனோ; கூத்தாடுபவனே, எனக்குப் பொருத்தமானவனே என்று புகழ்வேனோ; என்னென்று சொல்லுவேன். எ.று.
கருத்தன் - கருத்தை இடமாகக் கொண்டு எழுந்தருளுபவன்; தலைவன் எனினும் அமையும். கணவன் - தலைவன்; கண் போன்றவன் எனினும் பொருந்தும். ஒருத்தன் - ஒப்பற்றவன். திருத்தன் - உயர்ந்தவன்; திருந்தாரைச் செந்நெறியிற் செலுத்தித் திருத்துபவன் எனினும் அமையும். நிருத்தன் - கூத்தாடுபவன். பொருத்தன் - பொருத்தமானவன். நின்னைக் கருத்தனே, கணவனே, ஒருத்தனே, நாயகனே, பெரியனே, திருத்தனே, செல்வனே, சித்தனே, நிருத்தனே, பொருத்தனே என்கோ என இயைக்க. (4)
|