4028. தாயனே எனது தாதையே ஒருமைத்
தலைவனே தலைவனே என்கோ
பேயனேன் பிழையைப் பொறுத்தருள் புரிந்த
பெருந்தகைப் பெரும்பதி என்கோ
சேயனேன் பெற்ற சிவபதம் என்கோ
சித்தெலாம் வல்லசித் தென்கோ
தூயனே எனது நேயனே என்கோ
சோதியுட் சோதிநின் றனையே.
உரை: உலகிலுள்ள ஒளிப் பொருட்கள் எல்லாவற்றிற்கும் உள்ளொளியாய் ஒளிர்பவனாகிய உன்னை எனக்குத் தாயுமாய்த் தந்தையுமாகியவனே என்பேனோ தன்னிகரில்லாத ஒருமைத் தலைவன் என்பேனோ; பேய் போல் ஆசை மிக்குச் செய்யும் என் பிழைகளைப் பொறுத்து நல்லருள் புரிந்த பெருந்தகைமையை யுடைய பெருமை சான்ற தலைவன் என்று புகழ்வேனோ; சிறிய குழந்தை போன்ற நான் பெற்ற சிவபதம் என்று சொல்லுவேனோ; அரிய சித்துக்கள் எல்லாவற்றையும் செய்ய வல்ல சித்துப் பொருள் என்பேனோ; தூயவனும் நேயனுமாகிய பெருமானே என்று பேசுவேனோ; யாதென்று மொழிவேன். எ.று.
தாய் போன்றவனைத் தாயன் என்று உரைக்கின்றார். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தனித் தலைவனாதலால் சிவனை, “ஒருமைத் தலைவன்” என வுரைக்கின்றார். ஆசை மிக்கு அலைவதைப் பேய் என்பது பற்றி, “பேயனேன்” என்று கூறுகின்றார். ஆசை மிக்க வழிக் குற்றங்கள் பெருகுதலால் அவற்றைப் பொறுத்தருளும் தகவினும் பெருமை தருவது பிறிதில்லையாதலால், “பிழையைப் பொறுத்தருள் புரிந்த பெருந்தகைப் பெரும் பதி” என வுரைக்கின்றார். சேய் அன்னேன் என்பது சேயனேன் என வந்தது. சேய் - சிறு குழந்தை. நேயன் - நண்பன். தாயனே, தாதையே, ஒருமைத் தலைவனே, தலைவனே, பெரும் பதியே, சிவபதம், சித்து, தூயன், நேயன், என்கோ என இயையும். (5)
|