4029.

     அரும்பிலே மலர்வுற் றருள்மணம் வீசும்
          ஆனந்தத் தனிமலர் என்கோ
     கரும்பிலே எடுத்த சுவைத்திரள் என்கோ
          கடையனேன் உடையநெஞ் சகமாம்
     இரும்பிலே பழுத்துப் பேரொளி ததும்பி
          இலங்கும்ஓர் பசும்பொனே என்கோ
     துரும்பினேன் பெற்ற பெரும்பதம் என்கோ
          சோதியுட் சோதிநின் றனையே.

உரை:

     ஒளிப் பொருட்கள் எல்லாவற்றிற்கும் உள்ளொளியாய் ஒளிர்கின்ற பெருமானாகிய உன்னை, அரும்பி மலர்ச்சியுற்று அருள் ஞான மணத்தை வீசி இன்பம் செய்கின்ற ஒப்பற்ற மலர் என்று வாழ்த்துவேனோ; கரும்பின் சாற்றைக் காய்ச்சி எடுத்த சுவை யுருவாகிய திரள் என்று சொல்வேனோ; கீழ்மகனாகிய என்னுடைய நெஞ்சமாகிய இரும்பினால் பற்றிப் பழுக்கக் காய்ச்சிய மிக்க ஒளி நிறைந்து விளங்கும் ஒப்பற்ற பசும்பொன் என்று பகர்வேனோ; துரும்பு போல் அற்பனாகிய யான் பெற்ற பெறுதற்கரிய சிவபதப் பொருளே என்று செப்புவேனோ; யாதென்று சொல்லிப் புகழ்வேன். எ.று.

     முகை அரும்பி முற்றி மலர்ந்த பூ நிறைந்த மணம் கமழ்வதாதலின் அதுபோல் திருவருள் ஞானமாகிய நறுமணம் பரப்பி எல்லா வுயிரும் இன்புறச் செய்யும் ஒப்பற்ற தெய்வ மலர் போல்வதால் சிவனை, “அரும்பிலே மலர்வுற்று அருள் மணம் வீசும் ஆனந்தத் தனிமலர் என்கோ” என்றும், இனிமை மிகுதிக்குக் கரும்பின் சாற்றைக் காய்ச்சி எடுத்த கட்டியினும் நிகர் வேறில்லாமையால் அதனைச் சிவானந்தத்திற்கு உவமை கூறுவாராய், “கரும்பிலே எடுத்த சுவைத் திரள் என்கோ” என்றும் இயம்புகின்றார். இருப்புக் கருவியால் பொன்னைப் பற்றித் தீயில் இட்டுத் தீயின் நிறம் பெறுமாறு நன்கு காய்ச்சிய பசும் பொன், நிறமும் ஒளியும் கொண்டு விளங்குவது போலச் சிவபெருமான் தமது நெஞ்சின்கண் இருந்து பொன்னிறம் பொலியும் திருவுருவில் காட்சி தருவது பற்றி, “கடையனேன் உடைய நெஞ்சகமாம் இரும்பிலே பழுத்துப் பேரொளி ததும்பி இலங்கும் ஓர் பசும்பொன்” என்று இயம்புகின்றார். நெஞ்சுக்கு இரும்பை ஒப்புக் கூறுகிறாராதலால் அதற்கு ஒப்ப, “கடையனேனுடைய நெஞ்சகமாம் இரும்பு” என்றும், நெஞ்சின்கண் சிவ பரம்பொருள் விளங்க, “நெஞ்சகமாம் இரும்பிலே பழுத்துப் பேரொளி ததும்பி இலங்கும் ஓர் பசும்பொன்னே” என்றும் சுடச் சுடரும் இயல்பினதாதலால், “பேரொளி ததும்பி இலங்கும் பசும்பொன்” என்றும் எடுத்துரைக்கின்றார். ஆனந்தத் தனிமலர், சுவைத் திரள், பசும்பொன், பெரும் பதம் என்கோ என இயையும்.

     (6)