4030. தாகமுள் எடுத்த போதெதிர் கிடைத்த
சர்க்கரை அமுதமே என்கோ
மோகம்வந் தடுத்த போதுகைப் பிடித்த
முகநகைக் கணவனே என்கோ
போகமுள் விரும்பும் போதிலே வலிந்து
புணர்ந்தஓர் பூவையே என்கோ
ஆகமுட் புகுந்தென் உயிரினுட் கலந்த
அம்பலத் தாடிநின் றனையே.
உரை: உடலுட் புகுந்து அதனுள் உறையும் உயிரின்கட் கலந்து அம்பலத்தில் ஆடுகின்ற பெருமானாகிய உன்னைப் பசி தாகம் எடுத்தபோது எதிரிலே கிடைக்கப் பெற்ற சர்க்கரை கலந்த பாலமுதம் என்று புகழ்வேனோ; காம மோகம் வந்து பொருந்தியபோது கையைப் பற்றி முகத்தில் நகை யரும்பிக்கூடும் கணவன் என்று சொல்லுவேனோ; காம வேட்கை உள்ளத்தில் தோன்றி ஆசை உணர்வு மிகும்போது தானாகவே வலிய வந்து கூடுகின்ற ஒப்பற்ற பூவைப் போன்ற இளநங்கை என்று சொல்லுவேனோ; என்னென்று உன்னைப் புகழ்வேன். எ.று.
சர்க்கரை அமுதம், முகநகைக் கணவன், பூவை, என்கோ என இயையும். தாகம், பசியோடு கூடிய நீர் வேட்கை. சர்க்கரை கலந்த பாலைச் “சர்க்கரை அமுதம்” என்று கூறுகின்றார். மோகம் - காம மயக்கம். முகநகைக் கணவன் - முகத்தில் அன்பு நகை மலரக் கொண்ட கணவன். போகம் - காம இன்பம். பூவை - பூச்சூடிய இளநங்கை. (7)
|