4032.

     யோகமெய்ஞ் ஞானம் பலித்தபோ துளத்தில்
          ஓங்கிய காட்சியே என்கோ
     ஏகமெய்ஞ் ஞான யோகத்திற் கிடைத்துள்
          இசைந்தபேர் இன்பமே என்கோ
     சாகலைத் தவிர்த்தென் தன்னைவாழ் விக்கச்
          சார்ந்தசற் குருமணி என்கோ
     மாகமும் புவியும் வாழ்வுற மணிமா
          மன்றிலே நடிக்கின்றோய் நினையே.

உரை:

     வானத்தில் உள்ளவர்களும் மண்ணுலகில் உள்ளவர்களும் இன்ப வாழ்வு பெறுதல் வேண்டி மணிகள் இழைத்த பெரிய அம்பலத்திலே கூத்தாடுகின்ற பெருமானாகிய உன்னை யோக நெறியில் மெய்ம்மை ஞானம் கைவந்த போது மனத்தின்கண் உயர்ந்து தோன்றுகின்ற காட்சிப் பொருள் என்று புகல்வேனோ; சிவத்தோடு ஏகனாய் நின்று நோக்கும் மெய்ம்மை ஞான யோகத்தில் எய்தப் பெற்று உயிரெலாம் கலந்த பேரின்பப் பொருள் என்று புகழ்வேனோ; இறத்தலைப் போக்கி என்னை இறவா நிலையில் வாழச் செய்தற்கு என்னை அடைந்த சற்குரு மணி என்று சாற்றுவேனோ; என்னென்று சொல்லி ஏத்துவேன். எ.று.

     யோக நெறியில் பெறலாகும் உண்மை ஞானம் யோக மெய்ஞ் ஞானம் எனப்படுகிறது. ஞானக் கண் கொண்டு சிந்தையில் நோக்குவார்க்கு ஆண்டுக் காட்சிப் படுகின்ற பரம்பொருள் ஞானக் காட்சி மயமாய்ப் புலப்படுதல் தோன்ற, “யோக மெய்ஞ்ஞானம் பலித்தபோது உளத்தில் ஓங்கிய காட்சியே” என வுரைக்கின்றார். ஞானக் காட்சியும் பொருளுருவாய் இன்றித் தூய காட்சி மயமாய் விளங்குதல் பற்றி, “ஓங்கிய காட்சி” என ஓதுகின்றார். இதனை, “ஞானக் கண்ணினில் சிந்தை நாடுக” எனச் சிவஞான போதம் (சூ. 9) கூறுகிறது. மெய்ஞ்ஞான யோகத்தைச் சான்றோர் ஏகனாகி நிற்றல் என்பர். சிவத்தோடு ஏகனாகி நிற்கும் இடத்துச் சீவன் செய்யும் செயல் அனைத்தும் சிவன் செயலாய் இன்பம் செய்தலின் அதனை, “ஏக மெய்ஞ்ஞான யோகத்திற் கிடைத்து உள்ளிசைந்த பேரின்பமே” என்று இயம்புகின்றார். இதனை, “யான் செய்தேன் பிறர் செய்தார் என்னது யான் என்னும் இக்கோணை ஞான எரியால் வெதுப்பி நிமிர்த்துத் தான் செவ்வே நின்றிட அத்தத்துவன் தான் நேரே தனை யளித்து முன் நிற்கும் வினை ஒழித்திட்டோடும்” என்று சிவஞான சித்தியார் உரைப்பது காண்க. மெய்ஞ்ஞான யோகப் பயன் இன்ப மயமாதலின் அதனை, “இன்பமே” என இசைக்கின்றார். “சாதலின் இன்னாதது இல்லை” (குறள்) எனச் சான்றோர் உரைத்தலின், அஃது எய்தாவாறு காத்தலே சான்றாண்மையாதல் பற்றி, “சாகலைத் தவிர்த்து என்றன்னை வாழ்விக்கச் சார்ந்த சற்குரு மணி” எனவும், சாகா வாழ்வு சற்குருவின் அருள் ஞானத்தால் பெறலாவது என்பது விளங்க, “சற்குரு மணி” எனவும் இயம்புகின்றார். மன்றில் நடிக்கின்ற நின்னை, உளத்தில் ஓங்கிய காட்சி, உள்ளிசைந்த பேரின்பமே, சற்குரு மணி என்கோ என இயையும்.

     (9)