4035.

     சொல்லுகின்ற என்சிறுவாய்ச் சொன்மாலை அத்தனையும்
     வெல்லுகின்ற தும்பைஎன்றே மேல்அணிந்தான் - வல்லிசிவ
     காம சவுந்தரிக்குக் கண்ணனையான் ஞானசபைச்
     சேமநட ராஜன் தெரிந்து.

உரை:

     கொடி போன்ற சிவகாம சுந்தரியாகிய உமாதேவிக்குக் கண் போன்றவனும், ஞான சபையின்கண் நலம் நிறைந்த கூத்தப் பெருமான், சொல்லுகின்ற என்னுடைய சிறுமை நிறைந்த வாய் வழியாகத் தொடுக்கின்ற சொன்மாலைகள் எல்லாவற்றையும் தான் பகைவரை வெல்லுகின்ற தும்பை மாலையாகத் தன்மேல் அணிந்தருளினான். எ.று.

     கொடி போன்ற இடையை யுடையவளாதலால் உமாதேவியை, “வல்லி சிவகாம சவுந்தரி” எனவும், கண் போல் அவளுக்கு ஞான நாட்டம் தந்து சிறப்பிக்கின்றானாதலால், “சிவகாம சவுந்தரிக்குக் கண்ணனையான்” எனவும், ஞான சபையின்கண் உலகிலுள்ள ஆன்மாக்களுக் கெல்லாம் நலம் உண்டாகக் கூத்தாடுகின்றானாதலால், “ஞான சபைச் சேம நடராசன்” எனவும் தெரிவிக்கின்றார். சிறப்பில்லாத சொற்களால் ஞானச் சிறப்பில்லாத தனது சிறு சொற்களால் ஆகிய சொன்மாலைகள் என்பதற்கு, “சொல்லுகின்ற என் சிறுவாய்ச் சொன்மாலை” என்றும், அவற்றை மேன் மேலும் பாடுதற்கு ஊக்கம் எழுந்த வண்ணம் இருத்தலால் தன்னுடைய பாட்டுக்களை இறைவன் ஏற்றருளுகின்றான் என்று நினைக்கின்றாராதலால், “வெல்லுகின்ற தும்பை என்றே மேல் அணிந்தான்” என்றும் விளம்புகின்றார். தும்பை - போர் செய்யும் வீரர்கள் அணியும் மாலை. இது தும்பைப் பூக்களால் தொடுக்கப்படுதலால் தும்பை எனப்படுகிறது. கண்ணனையானும் நடராசனுமாகிய சிவபெருமான் சொல்மாலை அத்தனையும் தும்பை என்றே மேல் அணிந்தான் என இயையும். என் வாய்ச் சிறு சொல்மாலை எனற்பாலது, என் சிறு வாய்ச் சொல்மாலை என மாறி நின்றது.

     இதனால், தான் பாடும் பாட்டுக்களைத் தும்பை மாலை போல இறைவன் அணிந்தருளுகின்றான் என வடலூர் வள்ளல் மகிழ்ந்தேற்கின்றார் என்பதாம்.

     (2)