4036. ஏதாகு மோஎன நான் எண்ணி இசைத்தஎலாம்
வேதாக மம்என்றே மேல் அணிந்தான் - பாதார
விந்தம் எனதுசிர மேல்அமர்த்தி மெய்அளித்த
எந்தைநட ராஜன் இசைந்து.
உரை: தனது திருவடிகளாகிய தாமரை மலரை, நின்னுடைய தலைமேல் வைத்து மெய்யுணர்வு தந்த எந்தையாகிய நடராசப் பெருமான் மனமுவந்து யாது விளையுமோ என நினைந்து நான் சொன்ன பாட்டுக்கள் எல்லாவற்றையும் வேத உரை எனவும், ஆகம வுரை எனவும் ஏற்றுக்கொண்டு தன்மேல் அணிந்து கொண்டான் அவன் அருள் இருந்தவாறு என்னே. எ.று.
பாதார விந்தம் - பாதமாகிய அரவிந்தம். அரவிந்தம் - தாமரை. பாதம் - திருவடி. சிரம் - தலை. தனது திருவடியை வணங்குபவர் தலையில் பொருந்த வைத்தல், திருவடி தீக்கை எனப்படும். திருவடி தீக்கை மெய்யுணர்வு நல்கும் சிறப்புடையதாகலின் அதனை யுணர்த்து நிலையில், “பாதார விந்தம் எனது சிர மேல் அமர்த்தி மெய்யளித்த எந்தை” என்று விதந்து ஓதுகின்றார். தான் பாடுகின்றவற்றை இறைவன் ஏற்பானோ ஏலாது புறக்கணிப்பானோ என எண்ணி வருந்தினமை தோன்ற, “ஏதாகுமோ என நான் எண்ணி இசைத்த எலாம்” என்றும், அவற்றைத் தான் ஒருகாலத்து உரைத்தருளிய வேதவாக்கு என்றும், ஆகம வசனம் என்றும் ஏற்றுக்கொண்டு மகிழ்ந்தான் என்பாராய், “வேதாகமம் என்றே மேல் அணிந்தான்” என்றும் இயம்புகின்றார். எந்தையாகிய நடராசப் பெருமான் நான் இசைத்த எல்லாம் வேதாகமம் என்று அணிந்தான் என இயையும்.
இதனால், தாம் பாடுகின்ற பாட்டுக்களை, இறைவன் ஏற்றருளிய சிறப்பைப் புகழ்ந்தவாறாம். (3)
|