4037. இன்உரைஅன் றென்றுலகம் எல்லாம் அறிந்திருக்க
என்உரையும் பொன்உரைஎன் றேஅணிந்தான் - தன்உரைக்கு
நேர்என்றான் நீடுலகில் நின்போல் உரைக்கவல்லார்
ஆர்என்றான் அம்பலவன் ஆய்ந்து.
உரை: அம்பலவாணனாகிய நடராசப் பெருமான், இனிமை பொருந்திய சொல்லாகாது என்று உலகவர் எல்லோரும் அறிந்திருக்கவும் என்னுடைய புல்லிய பாக்களையும் பொருள் நிறைந்த சிறந்த பாட்டுக்கள் என்று அணிந்து கொண்டதோடு, என் சொற்களைத் தன்னுடைய சொற்களுக்கு நிகராகுமென்றும், நீண்ட இவ்வுலகத்தில் உன்னைப் போல் பாட வல்லவர் யார் என்றும் என்னைப் புகழ்கின்றான். எ.று.
அம்பலத்தில் ஆடும் பெருமானாதலால் அவனை, “அம்பலவன்” எனக் குறிக்கின்றார். உலகில் அறிஞர் பலரும் தம்முடைய பாட்டுக்களைச் சிறந்தவை அல்லவெனக் கருதுகின்றார்கள் என்பாராய், “இன்னுரை அன்றென்று உலகமெல்லாம் அறிந்திருக்க” எனவும், எனினும் என்னுடைய பாட்டுக்களைச் சிறந்தவையாகக் கருதி ஏற்றுக் கொள்ளுகின்றான் எனக் கூறுவாராய், “என்னுரையும் பொன்னுரை என்றே அணிந்தான்” எனவும் உரைக்கின்றார். சிறந்தவை அல்ல வென்று உலகத்தோர் கூறவும் எங்கள் பெருமானாகிய சிவபிரான் என்பால் வந்து நின்னுடைய சொற்கள் யான் உரைக்கும் வேதாகமங்களைப் போல் உள்ளன என்பாராய், “தன் உரைக்கும் நேர் என்றான்” என்றும், நீ பாடுவது போலப் பரந்த இவ்வுலகில் பாடுபவர் பிறரில்லை எனப் பாராட்டுவானாய், “நீடு உலகில் நின்னைப் போல் உரைக்க வல்லார் ஆர் என்றான்” என்றும் எடுத்துரைக்கின்றார். பாராட்டு முகத்தால் இவ்வாறு கூறினானோ என எண்ணாவாறு ஆய்ந்து கூறினான் எனத் தெளிவுறுத்தற்கு “அம்பலவன் ஆய்ந்து” உரைத்தான் எனப் புகல்கின்றார். அணிந்தான் அணிந்து எனப் பொருள்படும் முற்றெச்சம். அம்பலவன், அணிந்து, ஆய்ந்து, தன்உரைக்கு நேர் என்றான், நின் போல் உரைக்க வல்லார் ஆர் என்றான் என இயையும்.
இதனால், தாம் பாடும் பாட்டுக்களை இறைவன் பாராட்டி மேற்கொண்ட திறம் தெரிவித்தவாறாம். (4)
|