4038. என்பாட்டுக் கெண்ணாத தெண்ணி இசைத்தேன்என்
தன்பாட்டைச் சத்தியமாத் தான்புனைந்தான் - முன்பாட்டுக்
காலையிலே வந்து கருணைஅளித் தேதருமச்
சாலையிலே வாஎன்றான் தான்.
உரை: முன்னே யான் பாடிய காலத்தில் என்பால் வந்து திருவருள் ஞானமளித்துத் தருமச் சாலைக்கு வருக வென்று அருளிய பெருமான் முன்பெல்லாம் எண்ணாதவற்றை எண்ணி என் வாய்வந்தன பாடினேனாக நின் பாட்டுக்களை உளம் கலந்து ஒன்றி நான் பாடியதாகக் கொண்டு ஏற்றருளினான். எ.று.
உள்ளம் ஒன்றி நினைந்து ஓதாமல் என் வாய் வந்த சொற்களால் முன் எண்ணாத எண்ணங்களை எண்ணிப் பாடினேன் என்பாராய், “என் பாட்டுக்கு எண்ணாதது எண்ணி இசைத்தேன்” என்றும், அப்பாட்டினையும் நான் உளம் கலந்து பாடியதாகக் கருதி ஏற்றருளினான் என்பாராய், “என்றன் பாட்டைச் சத்தியமாத் தான் புனைந்தான்” என்றும் கூறுகின்றார். முன்பொருகால் இறைவனை நினைந்து பாடிக் கொண்டிருக்கையில் தன்முன் எழுந்தருளி இறைவன் அருள் செய்த குறிப்பை, “முன் பாட்டுக் காலையிலே வந்து கருணை அளித்து” என்று இசைக்கின்றார். தருமச் சாலை வள்ளற் பெருமான் வடலூரின்கண் அமைத்திருந்த சாலை.
இதனால், வடலூர் ஞான சபையில் இருந்த வள்ளற் பெருமானை இறைவன் தருமச் சாலைக்கு வரச் செய்த திறம் தெரிவித்தவாறாம். (5)
|