4039. என்னே அதிசயம்ஈ திவ்வுலகீர் என்னுரையைப்
பொன்னே எனமேற் புனைந்துகொண்டான் - தன்னேரில்
நல்ஆர ணங்கள்எலாம் நாணியவே எல்லாஞ்செய்
வல்லான் திருக்கருணை வாய்ப்பு.
உரை: தனக்கு ஒப்பில்லாத நலம் நிறைந்த வேதங்கள் எல்லாம், எல்லாம் செய்ய வல்லவனாகிய சிவபெருமானுடைய திருவருளைப் பெறும் வாய்ப்பு இல்லாமையால் நாணி ஒடுங்கினவாயினும், என்னுடைய புல்லியபாட்டுக்களைப் பொன் போல் உயர்ந்தவையாக ஏற்று அணிந்து கொண்டான்; உலகத்தில் உள்ளவர்களே இந்த அதிசயத்தை என்னென்று சொல்வேன். எ.று.
ஆரணங்கள் - வேதங்கள். அவை ஒப்பற்ற சிறப்புடையனவாதலால் அவற்றை, “தன்னேரில் நல்லாரணங்கள்” என்று குறிக்கின்றார். இறைவனுடைய திருவருள் நலத்தை முற்ற வுணர்ந்து ஓதும் சிறப்பு இல்லாமையால், இறைவனுடைய திருவருள் ஞானத்தைப் பெற முடியாமையால் ஒடுங்குகின்றன என்பதற்கு, “திருக்கருணை வாய்ப்பு நாணியவே” எனத் தெரிவிக்கின்றார். வாய்ப்புப் பெற மாட்டாமையால் “நாணியவே” என இயையும். பெற மாட்டாமை என்பது ஆற்றலால் வருவிக்கப்பட்டது. வேதங்களும் பெற முடியாத திருவருள் வாய்ப்பைத் தாம் பெற்றுணர்ந்து பாடுவது தமக்கே மிக்க வியப்பைத் தருவதால் வடலூர் வள்ளல், “என்னே அதிசயம் ஈது இவ்வுலகீர்” என்று உரைக்கின்றார்.
இதனால், திருவருள் வாய்ப்பு தமக்கு எய்தியதால் தாம் இனிது பாட நேர்ந்தமையை எண்ணி மகிழ்ந்தவாறாம். (6)
|