4040. முன்பின்அறி யாது மொழிந்தமொழி மாலைஎலாம்
அன்பின்இசைந் தந்தோ அணிந்துகொண்டான் - என்பருவம்
பாராது வந்தென் பருவரல்எல் லாம்தவிர்த்துத்
தாரா வரங்களெலாம் தந்து.
உரை: என்னுடைய பக்குவம் நோக்காமல் என்பால் வந்து, என் துன்பமெல்லாம் போக்கி இதுகாறும் நல்கி யிராத எல்லா வரங்களையும் தந்து காரண காரியம் நோக்காமல் யான் மொழிந்த சொன்மாலைகள் எல்லாவற்றையும் அன்போடு இசைந்து அணிந்து கொண்டான். எ.று.
பருவம் - பதி பக்குவ நிலை. அன்பர்களுடைய பதி பக்குவத்திற்கு ஏற்ப ஞானமும் பிற வரங்களும் தருவது இறைவனுடைய இயல்பாகும். இப்பொழுது அது நோக்காமல் என்பால் வந்து என்னுடைய துன்பங்களைப் போக்கியதோடு பெறுதற்கரிய வரங்கள் எல்லாவற்றையும் தந்தருளினான் சிவபெருமான் என்பாராய், “என் பருவம் பாராது வந்தென் பருவரல் எல்லாம் தவிர்த்துத் தாரா வரங்களெலாம் தந்து” என்று உரைக்கின்றார். ஒரு நிகழ்ச்சிக்குரிய காரண காரியங்கள் முன்பின் எனப்படுகின்றன. யான் சொன்ன மாலைகளை ஏற்பதற்குரிய காரணத்தை முன் என்றும், அதனால் விளையும் பயனைப் பின் என்றும் குறித்து, இவ்விரண்டையும் நோக்காமல் ஏற்றருளிய பெருநலத்தை வியந்துரைக்கின்றாராதலால், “முன்பின் அறியாது மொழிந்த மாலை எலாம் அன்பின் இசைந்து அந்தோ அணிந்து கொண்டான்” என்று மொழிகின்றார். இவ்வாறு செய்தருளியதற்குக் காரணம் எனக்கு அவன்பாலும் அவனுக்கு என்பாலும் உளதாகிய அன்பு காரணம் என அறிவிப்பாராய், “அன்பின் இசைந்து அணிந்து கொண்டான்” என்று இயம்புகின்றார். அந்தோ என்பது வியப்புக் குறித்து நின்றது.
இதனால், அன்பு காரணமாக என்னுடைய சொன் மாலைகளை இறைவன் ஏற்றருளுகின்றான் என்றவாறாம். (7)
|