4041. பொன்னொப்ப தாம்ஒருநீ போற்றியசொன் மாலைஎன்றே
என்னப்பன் என்சொல் இசைந்தணிந்தான் - தன்ஒப்பில்
வல்லான் இசைந்ததுவே மாமாலை அற்புதம்ஈது
எல்லாம் திருவருட்சீ ரே.
உரை: எனக்கு அப்பனாகிய சிவபெருமான் என்பால் அருள் கூர்ந்து ஒப்பற்ற நீ விரும்பித் துதித்தளித்த சொன்மாலை பொன் போல் உயர்ந்ததாம் என்று சொல்லி என்னுடைய சொன்மாலையை விரும்பி அணிந்து கொண்டான்; தனக்கு ஒப்பு ஒருவருமில்லாத எல்லாம் வல்லவனாகிய சிவபெருமான் விரும்பிய சொன்மாலை எதுவோ அதுவே பெரிய மாலையாகும்; இதுவும் ஓர் அற்புதமாகும்; இங்ஙனம் நிகழ்வதெல்லாம் அவனுடைய திருவருள் சிறப்பேயாகும். எ.று.
எனக்குத் தந்தையாகவும் நான் அவனுக்கு மகனாகவும் முறைமையுற்றதனால் மகன் செயலைப் பாராட்டித் தந்தை மகிழ்வது போல, நான் செய்த சொன் மாலையைப் பொன் னொப்பதாம் ஒரு நீ போற்றிய சொன்மாலை என்று பாராட்டி என் சொன்மாலையை ஏற்றுக் கொண்டான் என்பாராய், “என் சொல் இசைந்து அணிந்தான்” என்று இயம்புகின்றார். எல்லா வல்லமையையும் உடைய பெருமானுக்கு ஒப்பாவது ஒன்றும் இல்லை, ஒப்பாவார் ஒருவரும் இல்லை என விளக்குதற்குச் சிவனை, “தன்னொப்பில் வல்லான்” என்று சாற்றுகின்றார். அவன் விரும்பி அணிவது எத்தகையது ஆயினும், அஃது ஒரு பெரிய மாலையேயாதலால், “இசைந்ததுவே மாமாலை” என்று இசைக்கின்றார். இச்செயல் நமக்கெல்லாம் அற்புதமாம் என்பார், “அற்புதம் ஈதெல்லாம்” எனவும், இதற்கெல்லாம் காரணம் அவரது திருவருட் பெருமையே என வலியுறுத்தற்கு, “ஈதெல்லாம் திருவருட் சீரே” எனவும் எடுத்துரைக்கின்றார்.
இதனால், என் சொல் மாலைகளை உயர்ந்தனவாகப் போற்றி இறைவன் அணிந்து கொள்வது அற்புதம் எனவும், திருவருட் சீர் எனவும் செப்பியவாறாம். (8)
|