4042. பின்முன்அறி யேன்நான் பிதற்றியசொன் மாலைஎலாம்
தன்முன்அரங் கேற்றெனவே தான்உரைத்தான் - என்முன்
இருந்தான்என் னுள்ளே இருக்கின்றான் ஞான
மருந்தான்சிற் றம்பலத்தான் வாய்ந்து.
உரை: எனக்கு முன்னிலையில் இருந்தவனும், தன்மையில் என்னுள்ளே இருக்கின்றவனும், ஞானமாகிய மருந்தாகுபவனும், சிற்றம்பலத்தில் எழுந்தருளுபவனுமாகிய சிவபெருமான், அருள் நிறைந்து காரிய காரணங்களை அறியாதவனாகிய நான் பாடிய சொன் மாலைகள் எல்லாவற்றையும் தனது திருமுன் அரங்கேற்றுக வென்று எனக்கு உரைத்தருளினான்; ஆதலால் இச்சொன்மாலையை அவனுடைய திருமுன் உரைக்கின்றேன். எ.று.
படர்க்கை நிலையில் எங்கும் எல்லாப் பொருளிலும் கலந்து ஒன்றியிருப்பவ னாயினும், என்னுடைய முன்னிலையிலும் தன்மை நிலையில் என்னுள்ளும் ஒன்றி உடனாய் இருக்கின்றான் என்று விளக்குவாராய், “என் முன் இருந்தான் என்னுள்ளே இருக்கின்றான்” என்று கூறுகின்றார். ஞானமாகிய மருந்தாய் இருந்து அறியாமையாகிய நோயைத் தீர்ப்பதால் சிவனை, “ஞான மருந்தான்” என்றும், திருச்சிற்றம்பலத்தின்கண் காட்சி தருதலால், “திருச்சிற்றம்பலத்தான்” என்றும் போற்றுகின்றார். சொன் மாலைகளைத் தொடுத்துச் சிவனுக்கு அணிவதால் தான் எய்த இருக்கும் பயன் ஈது எனவும், இம்மாலைகளைப் பாடுதற்குக் காரணம் ஈது எனவும் எண்ணிச் செய்யாமை விளங்க, “பின் முன் அறியேன் நான்” எனவும், இம்மாலைகளை அப்பெருமானுக் கென்றே பாடினமையால் இச்சொல் மாலைகளைத் தன் முன்னே பாடிக் காட்டுமாறு பணித்தான் என்பாராய், “சொன் மாலை எலாம் தன்முன் அரங்கேற்றெனவே தான் உரைத்தான்” எனவும் இயம்புகின்றார்.
இதனால், தாம் பாடிய பாட்டுக்களை இறைவன் திருமுன் ஓதுமாறு பணித்தமை தெரிவித்தவாறாம். (9)
|