4043. நீயேஎன் பிள்ளைஇங்கு நின்பாட்டில் குற்றம்ஒன்றும்
ஆயேம்என் றந்தோ அணிந்துகொண்டான் - நாயேன்செய்
புண்ணியம்இவ் வானிற் புவியின் மிகப்பெரிதால்
எண்ணியஎல் லாம்புரிகின் றேன்.
உரை: நீ எனக்கு மகனாதலால் இங்கே நீ பாடுகின்ற பாட்டில் குற்றம் ஒன்றும் காண மாட்டோம் என்று சொல்லி என் பாமாலையைப் பரிவோடு அணிந்து கொண்டான்; இதனால் நாய் போன்ற நான் செய்த புண்ணியம் இம்மண்ணுலகினும் விண்ணுலகினும் மிகப் பெரிதாம்; ஆகவே நான் எண்ணிய எண்ணங்கள் எல்லாவற்றையும் பாட்டுருவில் எழுதுகின்றேன். எ.று.
தமது சிறுமையைப் புலப்படுத்தற்கு “நாயேன்” என்று கூறுகின்றார். நான் பாடுகின்ற பாட்டுக்களில் உள்ள குணம் குற்றங்கள் யாதும் நோக்காமல் இறைவன் ஏற்றருளுகின்றான் என்ற மகிழ்ச்சி புலப்பட, “நீயே என் பிள்ளை இங்கு நின் பாட்டில் குற்றம் ஒன்றும் ஆயேம் என்று அந்தோ அணிந்து கொண்டான்” என்றும், குணமோ குற்றமோ ஏற்றுக் கொண்டதற்குக் காரணம் இதுவென விளக்குதற்கு, “நீயே என் பிள்ளை இங்கு நின் பாட்டில் குற்றம் ஒன்றும் ஆயேம்” என்றும் அறிந்து கொண்டான் எனப் புகல்கின்றார். இந்த அருளிப் பாட்டுக்குக் காரணம், “நான் செய்த புண்ணியம்” என்றும், அது மண்ணுலகினும் விண்ணுலகினும் பெரியது ஒன்றாம் என்பாராய், “இவ்வானிற் புவியின் மிகப் பெரிதால்” என்றும் இயம்புகிறார். இப்பெருமிதத்தால் நான் எண்ணும் எண்ணங்கள் எல்லாவற்றையும் பாட்டுருவில் பாடுகின்றேன் என்பார், “எண்ணிய எல்லாம் புரிகின்றேன்” என வுரைக்கின்றார்.
இதனால், தாம் செய்த புண்ணியப் பயனை வடலூர் வள்ளல் உணர்ந்து வியந்தவாறாம். (10)
|