4044. எண்ணுகின்றேன் எண்ணுதொறென் எண்ணமெலாம் தித்திக்க
நண்ணுகின்ற தென்புகல்வேன் நானிலத்தீர் - உண்ணுகின்ற
உள்ளமுதோ நான்தான் உஞற்றுதவத் தாற்கிடைத்த
தெள்ளமுதோ அம்பலவன் சீர்.
உரை: நிலவுலகத்து நன்மக்களே! அம்பலவாணனாகிய சிவனுடைய புகழ் உண்ணப் படுகின்ற உள்ளமுதம் என்றோ, நான் செய்த தவத்தால் கிடைத்த தெள்ளமுதம் என்றோ, சொல்லத் தக்கவகையில், எண்ணும் இயல்பினனாகிய யான் நினைக்கும் தோறும் என் நினைவகமெல்லாம் இனிக்கும்படி எய்துகின்றதாதலால் அதன் சிறப்பை என்னென்று சொல்லுவேன். எ.று.
நானிலம் - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு கூறுகளையுடைய நிலவுலகம். நிலத்தீர் எனப் பொதுப்படக் கூறினாராயினும் சிறப்புடைய நன்மக்களே குறிக்கப்படுகின்றார்கள் எனக் கொள்க. அவர்களை யல்லது பிறர் இறைவனுடைய புகழ்களைக் கேட்க விரும்பாராதலால், உள்ளமுதம் - உள்ளத்தால் உள்கிச் சுவைக்கப்படும் ஞான அமுதம். உஞற்றுத் தவம் - செய்யப்படும் தவம். அம்பலத்தாடும் பெருமானாதலால் சிவனை, “அம்பலவன்” என்று குறிக்கின்றார். எண்ணுவார் எண்ணுந் தோறும் சிவனது திருப்புகழ் இன்பமுறுத்தலின், “எண்ணுகின்றேன் எண்ணுதொறு என் எண்ணமெலாம் தித்திக்க நண்ணுகின்றது என் புகல்வேன்” என்று உரைக்கின்றார்.
இதனால், சிவனது திருப்புகழ் நினைக்குந் தோறும் இன்பமுறும் இயல்பின தென்பது கூறப்பட்டதாம். (11)
|