53. உத்தர ஞான சிதம்பர மாலை

    அஃதாவது, உத்தர ஞான சிதம்பரம் என்பது வடலூரில் உள்ள ஞான சிதம்பரச் சபையைக் குறிப்பது. அதனைச் சிறப்பிக்கும் பாமாலையாதலின் இஃது இவ்வாறு சிறப்பித்து ஓதப்படுகிறது.

கட்டளைக் கலித்துறை

4046.

     அருளோங்கு கின்ற தருட்பெருஞ் சோதி யடைந்ததென்றன்
     மருளோங்கு றாமல் தவிர்த்தது நல்ல வரமளித்தே
     பொருளோங்கி நான்அருட் பூமியில் வாழப் புரிந்ததென்றும்
     தெருளோங்க ஓங்குவ துத்தர ஞான சிதம்பரமே.

உரை:

     எப்பொழுதும் தெளிந்த நிலை உள்ளத்தில் ஓங்க, விளங்குவதாகிய உத்தர ஞான சிதம்பரம் திருவருளால் உயர்வுடையது; அருட்பெருஞ் சோதியாகிய ஆண்டவன் எழுந்தருளுவது; என்பால் உள்ள மயக்க வுணர்வு மிக்கு எழாமல் போக்குவது; நல்ல வரங்களைத் தந்து ஞானப் பொருளால் உயர்ந்து திருவருள் இன்ப உலகில் நான் வாழ்வதற்கு அருளுவதாம். எ.று.

     தில்லைச் சிதம்பரத்திற்கு, வடமேற்கில் உள்ளதாகலின் வடலூரில் உள்ள ஞான சபை உத்தர ஞான சிதம்பரம் எனப்படுகிறது. சிதம்பரம் - ஞானாகாசம் எனப் பொருள்படும். உத்தர ஞான சிதம்பரம் கண்டு வழிபடுவார்க்கு அருட் செல்வம் மிகுவிப்பது என்பாராய், “அருள் ஓங்குகின்றது” எனவும், அதற்குக் காரணம் அதன்கண் அருள் ஞானமே உருவாகிய சிவபெருமான் எழுந்தருளுவது என்பாராய், “அருட் பெருஞ் சோதி அடைந்தது” எனவும் கூறுகின்றார். காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்றும், உயிரின்கண் கிடந்து முற்றவும் நீக்கப் படாது இருப்பதாதலாலும், அவற்றுள் காமம் வெகுளி என்ற இரண்டினும் மயக்கம் வலி யுடையதாய் உணர்வை மறைப்பதாதலாலும் அதனை விதந்து எடுத்து அதனை ஒழிக்கும் திறம் விளங்க, “என்றன் மருள் ஓங்குறாமல் தவிர்த்தது” என்றும், மீளவும் அம்மருட்கையால் தாக்கப் படாமைப் பொருட்டு ஞான நலத்தை அளிப்பது என்றற்கு, “நல்ல வரமளித்து” என்றும், அந்த ஞானப் பயனால் பெறுதற்குரிய சிவபோகமாகிய பொருளால் நிறைந்து திருவருள் இன்ப வாழ்வு பெறுதற்கு உதவுவது என்பாராய், “பொருளோங்கி நான் அருட் பூமியில் வாழப் புரிந்தது என்றும் புகல்கின்றார். அருட் பூமியில் உளதாகும் வாழ்வு வாழ்வார்க்கு ஞான விளக்கமாய் நின்று நிலவும் நீர்மை சிறந்தது என வலியுறுத்தற்கு, “என்றும் தெருள் ஓங்க ஓங்குவது” என மொழிகின்றார்.

     இதனால், உத்தர ஞான சிதம்பரம் அருள் வாழ்வு பெற்றுச் சன்மார்க்க ஞானத் தெளிவை நல்கும் சிறப்புடையது என்று சொல்லியவாறாம். இனிவரும் பாட்டுக்களுக்கும் இதுவே கருத்தாகக் கொள்க.

     (1)