4047.

     இணைஎன்று தான்தனக் கேற்றது போற்றும் எனக்குநல்ல
     துணைஎன்று வந்தது சுத்தசன் மார்க்கத்தில் தோய்ந்ததென்னை
     அணைஎன் றணைத்துக்கொண் டைந்தொழில் ஈந்த தருளுலகில்
     திணைஐந்து மாகிய உத்தர ஞான சிதம்பரமே.

உரை:

     உத்தர ஞான சிதம்பரம் தானே தனக்கு நிகர் எனப் பெறுவது; நாளும் போற்றி வழிபடுகின்ற எனக்கு நல்ல துணையாக வந்தது; சுத்த சன்மார்க்க நெறியில் கலந்திருக்கின்ற என்னை என்பால் வருக என என்னைச் சேர்த்துக் கொண்டது; ஆக்குதல், காத்தல் முதலிய ஐந்து தொழிலும் செய்ய வல்ல ஆற்றலை எனக்கு நல்கியது; திருவருள் இன்ப உலகில் புணர்தல் முதலிய திணை ஐந்தும் கலந்ததுமாகும். எ.று.

     இணை - ஒப்பு. தனக்கு ஒப்பதும் உயர்ந்ததும் இல்லாதது என விளக்குதற்கு, “இணை என்று தான் தனக்கு ஏற்றது” என வுரைக்கின்றார். நல்ல துணை - ஞானப் பேற்றுக்கு அமைந்த துணை. சுத்த சன்மார்க்க ஞான நிலையமாய்த் தன்னைச் சார்ந்தாரைத் தன்பால் தடையின்றி ஏற்றருளுவது எனச் சிறப்பித்தற்கு, “சுத்த சன்மார்க்கத்தில் தோய்ந்தது என்னை அணை என்று அணைத்துக் கொண்டது” என்றும், படைத்தல் முதலிய தொழில் ஐந்தையும் செய்தல் சிவனுக்கே உரியதாயினும் அப்பெருமான் எல்லாம் செய்ய வல்லவனாதலால், அவ்வைந்தொழில் ஆற்றலையும் எனக்கு அருளுகின்றான் என்பாராய், “ஐந்தொழில் ஈந்தது” என்றும் இசைக்கின்றார். பொருள் உலகில் உயிர்களிடையே நுகரப்படும் இன்பம் கூடுதல், பிரிதல், இருத்தல், ஊடுதல், இரங்குதல் ஆகிய ஐந்தாலும் நுகரப்படுவது போல அருளுலகிலும் நுகரப்படுகிறது என்பாராய், “அருளுலகில் திணை ஐந்துமாகியது” என இயம்புகின்றார். கூடுதல் முதலிய ஐந்தும் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் முதலிய திணை ஐந்துக்கும் ஏற்ற உரிப் பொருளாதலின் அவற்றைத் திணை என்றே குறிக்கின்றார். அகப் பாட்டுக்குத் திணை வகுப்பவரும் உரிப் பொருளையே திணைக்குச் சிறந்ததாகக் கொள்வது, “முதல் கரு உரிப் பொருள் என்ற மூன்றே நுவலும் காலை முறை சிறந்தனவே” (தொல். பொ. 3) என்று சான்றோர் கூறுவதாற் காண்க.

     (2)