4049.

     பவமே தவிர்ப்பது சாகா வரமும் பயப்பதுநல்
     தவமே புரிந்தவர்க் கின்பந் தருவது தான்தனக்கே
     உவமேய மான தொளிஓங்கு கின்ற தொளிருஞ்சுத்த
     சிவமே நிறைகின்ற துத்தர ஞான சிதம்பரமே.

உரை:

     உத்தர ஞான சிதம்பரம் அன்பர்களின் பிறப்பை நீக்குவதும், இறவா வர மளிப்பதும், நன்னெறியில் தவம் புரிபவர்களுக்கு இன்பப் பயனை நல்குவதும், தனக்கு உவமம் தானேயாவதும், தெய்வ ஒளி கொண்டு விளங்குவதும், சுத்த சிவமே நிறைந்ததுமாகும். எ.று.

     பவம் - பிறப்பு. பிறப்பு துன்பம் தரும் இயல்பிற்றாதலால், “பவமே தவிர்ப்பது” எனவும், சாதல் பிறப்புக்கு ஏதுவாதலால் அத்துன்பத்தையும் நீக்குவது என்பதற்கு, “சாகா வரமும் பயப்பது” எனவும், நற்றவம் புரிபவர்க்குப் பயன் இன்பமேயாயினும், அது தானே செய்பவரை வந்தடையாதாகலால் அதனைக் கூட்டுவிக்கும் சிறப்புடைமை பற்றி, “நல்தவமே புரிந்தவர்க்கு இன்பம் தருவது” என நவில்கின்றார். உவமம், உவமேயம் என்ற இரண்டனுள் உவமம், உவமேயத்தினும் உயர்ந்தது என்னும் கருத்துப் பற்றி, உத்தர ஞான சிதம்பரத்திற்கு உயர்ந்தது வேறின்மையை வலியுறுத்தற்கு, “தான் தனக்கு உவமேயம் ஆனது” என வுரைக்கின்றார். சங்கச் சான்றோரும், “பிறர்க்கு நீ வாயின் அல்லது நினக்குப் பிறர் உவமம் ஆகா ஒரு பெருவேந்தே” (பதிற்று : 73) என்பது காண்க. ஒளி மயமானது உத்தர ஞான சிதம்பரம் என வுரைப்பாராய், “ஒளி ஓங்குகின்றது” எனவும், அதற்குக் காரணம் அங்கே அருள் ஞான ஒளி யுருவாகிய சுத்த சிவம் எழுந்தருளுகின்றது என்பாராய், “ஒளிரும் சுத்த சிவமே நிறைகின்றது உத்தர ஞான சிதம்பரம்” எனவும் உரைக்கின்றார்.

     (4)