4050. ஒத்தா ரையும்இழிந் தாரையும் நேர்கண் டுவக்கஒரு
மித்தாரை வாழ்விப்ப தேற்றார்க் கமுதம் விளம்பிஇடு
வித்தாரைக் காப்பது சித்தாடு கின்றது மேதினிமேல்
செத்தாரை மீட்கின்ற துத்தர ஞான சிதம்பரமே.
உரை: உத்தர ஞான சிதம்பரம் ஒத்தவர்களையும், உயர்ந்தவர்களையும், தாழ்ந்தவர்களையும், நேரே கண்டு மகிழுமாறு மன வொருமையுற்ற நன்மக்களை இனிது வாழச் செய்வதும், இன்மை யுற்று இறப்பவர்களுக்கு அமுதம் போன்ற சொற்களைச் சொல்லி ஆவன உதவுமாறு செய்யும் நன்மக்களுக்குக் காப்பு அளிப்பதும், அணிமா முதலிய சித்துக்களைச் செய்வதும், நிலவுலகில் இறப்பவர்களை மீட்பதுமாகும். எ.று.
ஒத்தாரையும், இழிந்தாரையும் உரைத்தலால் உயர்ந்தார் என்பது வருவிக்கப்பட்டது. முத்திறத்தாரையும் ஓரிடத்தே ஒப்ப நோக்குமிடத்துப் பார்ப்பவர்க்குக் கருத்தில் வேறுபாடு தோன்றுவதால் அதற்கு இடமின்றி முத்திறத்தாரையும் ஒப்ப நோக்கும் சமரச சன்மார்க்கர்களை, “ஒத்தாரையும் இழிந்தாரையும் நேர் கண்டுவக்க ஒருமித்தாரை வாழ்விப்பது” என மொழிகின்றார். அமுதமயமான இனிய உரைகளை அமுதம் என்கின்றார். இறந்தார்க்குத் தாம் உதவுவதே யன்றிப் பிறரையும் உதவச் செய்தல் நல்லறமாதலின் அவர்களை, “அமுதம் விளம்பி இடுவித்தாரைக் காப்பது” என்று கூறுகின்றார். மேதினி - நிலவுலகம்; செத்தார் - உயிர் இழந்தவர். சாதல் - மீளப் பிறப்பதற்கு ஏதுவாகலின் செத்தாரை மீட்பது நற்செயலாகக் கூறப்படுகிறது. “உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” என்று திருவள்ளுவர் உரைப்பது காண்க. (5)
|