4051. எத்தாலும் மிக்க தெனக்கருள் ஈந்ததெல் லாமும்வல்ல
சித்தாடல் செய்கின்ற தெல்லா உலகும் செழிக்கவைத்த
தித்தா ரணிக்கணி ஆயது வான்தொழற் கேற்றதெங்கும்
செத்தால் எழுப்புவ துத்தர ஞான சிதம்பரமே.
உரை: உத்தர ஞான சிதம்பரம், எல்லாவற்றாலும் உயர்ந்தது. எனக்குத் தன்னுடைய திருவருள் ஞானத்தை நல்கியது; எல்லாம் வல்ல சித்தராய்த் திருவிளையாடல் செய்வது; எல்லா உலகத்தவர்களும் செழித்து வாழ வைத்தது; இந்நிலவுலகிற்கு அழகாய் விளங்குவது; வானுலகத்தவர் தொழத் தக்க ஏற்ற முடையது; எவ்வுலகிலும் செத்தாரை எழுப்புவதாகும். எ.று.
எல்லாவற்றாலும் என்பது எத்தாலும் என வந்தது. திருவருள் இல்வழி எவ்வுயிரும் உய்தி பெறாது என்பது பற்றி, “எனக்கு அருள் ஈந்தது” என்று கூறுகின்றார். மதுரையில் எல்லாம் வல்ல சித்தராய்ச் சிவன் திருவிளையாடல் புரிந்தான் என்ற செய்தியை நினைவிற் கொண்டு, “எல்லாமும் வல்ல சித்தாடல் செய்கின்றது” என்று உரைக்கின்றார். எல்லா உலகுயிர்களும் பெறுவன பெற்று இனிது வாழ அருள்வது பற்றி, “எல்லா உலகும் செழிக்க வைத்தது” என்றும், இப்பூமியில் வடலூர் உத்தர ஞான சிதம்பரம் புவி மகட்டு அணி செய்வது பற்றி, “இத்தாரணிக் கணியாயது” என்றும், வானுலகத்துத் தேவர் பலரும் வந்து வணங்கத் தக்க சிறப்புடையது என்றற்கு, “இத்தாரணிக்கணியாயது வான் தொழற்கு ஏற்றது” என்றும் செப்புகின்றார். எவ்வுலகத்தும் பசுபாச ஞானமே யுற்று இறந்தவர்களை மீளவும் இறவா வாழ்வு பெறுதற் பொருட்டுச் செத்தவர்களை எழுப்புவது என்பாராய், “எங்கும் செத்தால் எழுப்புவது” என்று இயம்புகின்றார். (6)
|