54. செய்பணி வினவல்

    அஃதாவது, திருவருள் ஞான நலம் சிறக்கப் பெற்ற, வடலூர் வள்ளல் இவ்வுலகில் தாம் செய்தற்குரிய பணி வகைகளைத் தெரிவித்தருளுமாறு வேண்டுவதாம். இப்பகுதியில் முதல் எட்டுப் பாட்டுக்களில் திருவருளை நினைந்து ஆடிப் பாடி மகிழ்தற்கும், பின் நான்கு பாட்டுக்களில் அருள் பணி புரிதற்கும் திருவருள் வேண்டுமென விண்ணப்பிக்கின்றார்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

4057.

     அருளே பழுத்த சிவதருவில் அளிந்த
          பழந்தந் தடியேனைத்
     தெருளே சிற்றம் பலவாநின் செல்வப்
          பிள்ளை ஆக்கினையே
     மருளே முதலாம் தடைஎல்லாம் தீர்ந்தேன்
          நின்பால் வளர்கின்றேன்
     பொருளே இனிநின் தனைப்பாடி ஆடும்
          வண்ணம் புகலுகவே.

உரை:

     தெளிவே உருவாகிய திருச்சிற்றம்பலத்தை உடையவனே! அடியவனாகிய என்னை அருளாகிய கனிகள் பழுத்துள்ள சிவமாகிய மரத்தில் முற்றக் கனிந்த பழத்தைத் தந்து, நினக்கு என்னை நினக்குரிய செல்வப் பிள்ளை யாக்கினாய்; நானும் மருட்சி முதலிய தடைகள் எல்லாம் நீங்கி நின்னிடத்தே வளர்கின்றேன்; ஆதலால் இப்பொழுது நீயே பொருளாக உன்னைப் பாடி மகிழ்ந்தாடும் திறத்தை எனக்குச் சொல்லுவாயாக. எ.று.

     சிவ பரம்பொருளை மரமாக உருவகம் செய்தலால் சிவத்தின் திருவருளைக் கனியாக உருவகம் செய்து அதனைத் தமக்குச் செய்தருளிய நலத்தை, “அருளே பழுத்த சிவ தருவில் அளிந்த பழம் தந்து அடியேனை நின் செல்வப் பிள்ளை ஆக்கினை” என்று தெரிவிக்கின்றார். கனிகள் பலவற்றுள் நன்கு கனிந்த பழத்தைத் தேர்ந்து அளித்தமையால் அவ்வுரிமை பற்றித் தம்மை இறைவனுக்குச் சிறந்த பிள்ளையாகக் கொண்டுள்ளான் என்பாராய், “அடியேனை நின் செல்வப் பிள்ளை ஆக்கினை” என்று விளக்குகின்றார். பெற்ற பிள்ளைகளில் தனது அன்பை மிகுதியும் ஈர்க்கும் பிள்ளையைப் பெற்றோர்க்குச் செல்வப் பிள்ளை என வழங்கும் உலகியல் பற்றி, “நின் செல்வப் பிள்ளை ஆக்கினாய்” என்று தெரிவிக்கின்றார். மயக்கம், வெகுளி, காமம் முதலிய குற்றங்கள் ஞான வளர்ச்சிக்குத் தடையாதலால் அவற்றைப் போக்கிக் கொண்டு வளர்வது விளங்க, “மருளே முதலாம் தடை யெல்லாம் தீர்ந்தேன் நின்பால் வளர்கின்றேன்” எனச் செப்புகின்றார். தீர்ந்தேன் என்பது முற்றெச்சம்; மயக்கம் ஈண்டு மருள் எனப்படுகிறது. இனி - இப்பொழுது. பாடுதற் கமைந்த பொருள் அது முட்டின்றித் தமக்கு எய்தவும், அது பொருளாகப் பாடி மகிழ்ந்து ஆடவும் அருள் புரிய வேண்டும் என வேண்டுவாராய், “பொருளே இனி நின்றனைப் பாடி ஆடும் வண்ணம் புகலுகவே” என்று பாராட்டுகின்றார்.

இதனால், சிவமே பொருளாகப் பாடி மகிழ்ந்து ஆடுதற்கு அருள் புரிக என வேண்டியவாறாம்.

     (1)