4058.

     ஒருவா தடியேன் எண்ணியவா றெல்லாம்
          அருளி உளங்களித்தே
     திருவார் சிற்றம் பலவாநின் செல்வப்
          பிள்ளை ஆக்கினையே
     பெருவாழ் வடைந்தேன் பெருங்களிப்பால் பெருமான்
          நின்பால் வளர்கின்றேன்
     உருவார் உலகில் உனைப்பாடி ஆடும்
          வண்ணம் உரைத்தருளே.

உரை:

     திருவருட் செல்வம் நிறைந்த திருச்சிற்றம்பலத்தை உடையவனே! அடியேனாகிய நான் எண்ணியபடி எல்லாம் நீக்கமின்றி உதவி யருளித் திருவுள்ளம் மகிழ்ந்து என்னை நின்னுடைய செல்வப் பிள்ளை ஆக்கி விட்டாய்; அதனால் பெருவாழ்வு பெற்ற யான் மிக்க மகிழ்ச்சியால், பெருமானாகிய உன்னுடைய திருவருளில் வளர்ந்து வருகின்றேன்; உருவுடைய பொருள் நிறைந்த இவ்வுலகில் அருவுருவாக விளங்கும் உன்னைப் பாடி மகிழ்ந்தாடுமாறு அருள் செய்க.

     திருவார் சிற்றம்பலம் - திருவருட் செல்வம் நிறைந்த திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலத்தைத் தான் திருக்கூத்தாடுதற்குரிய இடமாகக் கொண்டமையின் சிவனை, “சிற்றம்பலவா” என்று உரைக்கின்றார். தான் எண்ணியது எண்ணியவாறு குறைவின்றி எய்த அருளினமை விளங்க, “அடியேன் எண்ணியவாறு எல்லாம் ஒருவாது அருளி” எனவும், ஈத்துவக்கும் இன்பக் குறிப்புத் தோன்ற, “உளம் களித்து” எனவும் ஓதுகின்றார். ஒருவுதல் - ஈண்டு குறைதற் பொருட்டு. செல்வப் பிள்ளைகட்கு அவர் எண்ணிய அறிந்து குறைவறக் கொடுத்தல் மக்கள் உலகியல் செயலாதலால், “நின் செல்வப் பிள்ளை ஆக்கினையே” என்று பாராட்டுகின்றார். எண்ணிய எண்ணியாங்கு பெறுவது வாழ்வுக்குப் பெருமையாதலால், “பெருவாழ்வு அடைந்தேன்” எனவும், அதனால் உளதாகும் இன்பம் பெரிதாதலால், “பெருங் களிப்பால்” எனவும் எடுத்துரைக்கின்றார். நிலம் நீர் முதலியன உலகக் கூறுகளனைத்தும் உருவுடையனவாதலால், “உருவார் உலகு” என்று இயம்புகின்றார்.

     இதனால், பெறுவன எல்லாம் பெற்று இறைவனுடைய செல்வப் பிள்ளையாய் வளர்கின்ற வடலூர் வள்ளல் இறைவனைப் பாடி ஆடும் வண்ணத்தை உரைத்தருள வேண்டியவாறாம்.

     (2)