4059.

     அவமே புரிந்தேன் தனைமீட்டுன் அருளார்
          அமுதம் மிகப்புகட்டிச்
     சிவமே சிற்றம் பலவாநின் செல்வப்
          பிள்ளை ஆக்கினையே
     பவமே தொலைத்தேன் பெருங்களிப்பால் பதியே
          நின்பால் வளர்கின்றேன்
     நவமே அடியேன் நினைப்பாடி ஆடும்
          வண்ணம் நவிலுகவே.

உரை:

     சிவ பரம்பொருளே! திருச்சிற்றம்பலத்தை உடையவனே! குற்றம் புரிந்தொழுகிய என்னை அச்சூழலினின்றும் மீட்டு உனது திருவருள் ஞானமாகிய அமுதத்தை மிகுதியும் தந்து என்னை உன்னுடைய செல்வப் பிள்ளையாக்கி விட்டாய்; அதனால் பிறவித் துன்பத்தைப் போக்கி மிக்க மகிழ்ச்சி கொண்டு தலைவனாகிய நின் திருமுன் வளரா நிற்கின்றேன்; ஆகவே அடியவனாகிய யான் நின்னைப் புதுமையுறப் பாடி ஆடி மகிழும் திறத்தை எனக்குச் சொல்லுவாயாக. எ.று.

     அவம் - குற்றம். அருளாரமுதம் - திருவருள் ஞானமாகிய அமுதம். மிகைப்பட ஊட்டினமை பற்றி, “நின் செல்வப் பிள்ளை ஆக்கினை” என்று செப்புகின்றார். பவம் - பிறவித் துன்பம். துன்பத்தைப் போக்கின படியால் உளதாகும் இன்பம் மிகுவது பற்றி, “பெருங் களிப்பால் நின்பால் வளர்கின்றேன்” என்று புகல்கின்றார். நவம் - புதுமை.

     இதனால், பிறவித் துன்பம் நீங்கினமை நினைந்து மகிழ்கின்றவாறாம்.

     (3)