4060. பல்வா தனையும் தவிர்த்தெனக்கே பரமா
னந்த அமுதளித்துச்
செல்வா சிற்றம் பலவாநின் செல்வப்
பிள்ளை ஆக்கினையே
வல்வா தனைசெய் மனச்செருக்கை மாற்றி
நின்பால் வளர்கின்றேன்
நல்வாழ் வளித்தாய் நினைப்பாடி ஆடும்
வண்ணம் நவிலுகவே.
உரை: அருட் செல்வமுடையவனே! திருச்சிற்றம்பலத்தையுடைய தலைவனே! பலவகைப்பட்ட துன்பங்களையும் போக்கிப் பரமானந்தமாகிய ஞான வமுதத்தை எனக்குத் தந்து என்னை நினக்குச் செல்வப் பிள்ளை ஆக்கி விட்டாய்; அதனால் நான் கொடிய துன்பத்தை விளைவிக்கின்ற மனச் செருக்கை நீக்கி நின் திருவருளில் வளர்கின்றேன் இவ்வாறு நல்வாழ் வளித்த பெருமானாகிய உன்னை நான் பாடி மகிழ்ந்து ஆடும் நெறியை உரைத்து அருளுக. எ.று.
வாதனை - துன்பம். பொறி புலன்களால் உளதாகும் ஆசை பற்றி உண்டாகும் துன்பங்கள் எண்ணிறந்தனவாதலால் அவற்றை, “பல்வாதனை” என்று பகர்கின்றார். உலகியல் அறிவின்பம் சிறிதாய் விரைந்து கெடும் இயல்பிற்றாதலால் சிவஞான ஆனந்தமாகிய அமுதம் மேன்மை யுடையதாதல் பற்றி அதனை, “பரமானந்த அமுது” என்று பகர்கின்றார். மேலான ஆனந்தத்தைத் தருதலால் தாம் சிவனுக்குச் செல்வப் பிள்ளை ஆகினமை தெரிவித்தற்கு, பரமானந்த அமுதளித்து நின் செல்வப் பிள்ளை ஆக்கினை” என்று தெரிவிக்கின்றார். மனத்தின்கண் தடித்தோங்கும் மயக்கத்தை, “மனச் செருக்கு” எனவும், அதனால் எளிதிற் நீக்குதற்கரிய வினைகள் தோன்றுவதால், “வல்வாதனைச் செய் மனச் செருக்கு” எனவும் கூறுகின்றார். செருக்காகிய இருள் சிவஞானத்தால் கெடுகின்றமையால், “மனச் செருக்கை மாற்றி நின்பால் வளர்கின்றேன்” என்றும், மனச் செருக்கு அகன்ற விடத்து நன்ஞான வாழ்வு எய்துவது பற்றி, “நல்வாழ்வு அளித்தாய்” என்றும் நவில்கின்றார்.
இதனால், மன விருளைக் கெடுத்து ஞான வாழ்வைத் தாம் பெற்றது கூறியவாறாம். (4)
|