4061. ஓவா இன்ப மயமாகி ஓங்கும்
அமுதம் உதவிஎனைத்
தேவா சிற்றம் பலவாநின் செல்வப்
பிள்ளை ஆக்கினையே
பூவார் மணம்போல் சுகந்தருமெய்ப் பொருளே
நின்பால் வளர்கின்றேன்
நாவால் அடியேன் நினைப்பாடி ஆடும்
வண்ணம் நவிலுகவே.
உரை: தேவ தேவனே! திருச்சிற்றம்பலத்தை யுடைய பெருமானே! ஒரு போதும் கெடாத இன்ப மயமாய் உயர்ந்து ஒளிரும் ஞான வமுதத்தை எனக்குத் தந்தருளி என்னை நினக்குச் செல்வப் பிள்ளை ஆக்கிக் கொண்டாய்; அதனால் பூவினிடத்து உளதாகிய நறுமணம் இன்பம் தருவது போல மெய்ம்மையான சுகத்தைத் தருகின்ற பரம்பொருளாகிய நின் திருவருளில் வளரா நிற்கின்றேன்; ஆகவே அடியவனாகிய யான் வாயால் மனமாரப் பாடி மகிழ்ந்து ஆடும் நெறியை அருளுவாயாக. எ.று.
ஓவா இன்பம் - கெடுதலில்லாத நிலைத்த பேரின்பம். திருவருள் ஞானம் இன்பமாய் மேன் மேலும் பெருகும் இயல்பினதாதலால் சிவஞானத்தை, “ஓவா இன்ப மயமாகி ஓங்கும் அமுதம்” என்று உரைக்கின்றார். பசுபாச ஞானம் கொண்டு பலவாதனைக்கு உள்ளாகும் சிறுமையுடைய தமக்கு இன்ப மயமாய் ஓங்கும் பதி ஞானமாகிய சிவஞானம் அருளினமையால் நான் நினக்குச் செல்வப் பிள்ளை ஆகி விட்டேன் என்று கூறுவாராய், “நின் செல்வப் பிள்ளை ஆக்கினையே” என்று இசைக்கின்றார். பூக்களின் நறுமணம் நுகர்வார்க்கு மெய்ம்மையான இன்பத்தைத் தருவது போலச் சிவஞானத்தால் பரஞானப் பரபோகம் எய்தினமை விளங்க, “பூவார் மணம் போல் சுகம் தரும் மெய்ப் பொருளே” என்று போற்றுகின்றார். பாட்டுக்களை நவில்வதற்குச் சிறப்புடைய கருவியாதலின், “நாவால் நினைப் பாடி ஆடும் வண்ணம்” என்று இயம்புகின்றார். பாடுதலும் மகிழ்ந்து ஆடுதலும் அவனருளால் அன்றி ஆகாவாதலின், “பாடி ஆடும் வண்ணம் நவிலுக” என்று பகர்கின்றார்.
இதனால், பரஞானம் தந்து தம்மைச் சிவபெருமான் சிறப்பித்தமை தெரிவித்தவாறாம். (5)
|